135
20. ஆமூர் மல்லன்
ஆமூர் நாட்டில் வாழ்ந்த மல்லன். முக்காவல் நாட்டு ஆமூர் மல்லன் எனவும் அழைக்கப் பெற்றவன். நாடிழந்து ஆமூரில் வாழ வந்த சோழ இளவல் போரவைக் கோப்பெருநற்கிள்ளியோடு, மற்போரிட்டு, தோற்று உயிர் துறந்தவன்42.
21. ஆய் எயினன்
சோழ நாட்டு வெளியம் எனும் நகர்க்கண் வாழ்ந்த வேளிர் குலத்தவன். வெளியன் வெண்மான் ஆய் எயினன் என்று அழைக்கப்பெற்றவன்.43 பாழி ஆண்ட நன்னன்பால் நட்பு கொண்டவன்; நன்னன் ஆட்சிக்குட்பட்ட வாகைப்பகுதியின் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டவன்44 வாகைமீது போர் தொடுத்த, பசும்பூண் பாண்டியன் படைத்தலைவனான அதியனைக் கொன்று களம் வென்ற வீரன்.45 நன்னனுக்குரிய பாழி மீது மிஞிலி என்பான் போர் தொடுத்த போது அவனை எதிர்த்துப் போரிட்டு அமரிடை வீழ்ந்தான்.
ஆய் எயினன் பறவைகளிடம் பேரன்பு கொண்டவன். அதனால் போரில் இறந்துபட்ட அவன் உடல் வெய்யிலில் வருந்தாவாறு பறவைகள் தம் சிறகுகளை விரிந்து நிழல் கொடுத்தன. தனக்காகப் போரிட்டு வீழ்ந்த ஆய் எயினனின் உரிமை மகளிர் துயர்துடைக்கவும் முன் வராத நன்னனின் இழி செயலைப் புலவர்கள் துாற்றினர்46 ஆய் எயினன் சிறந்த கொடையாளி. பாடி வந்த இரவலர்க்கு, பகல் இரவு பாராது யானைகளைப் பரிசிலாகக் கொடுத்து மகிழ்பவன்47.