154
கங்கை நீரில் பிறந்தவளாய 'க்ருதாசி' என்ற நீரரமகள். எனவே பல்லவர்; திரைதரு மகளிர் மரபினராவர் என்றும் சிலர் கூறுவர்.
56. தொண்டைமான்
ஆமூர் முதலாய இருபத்து நான்கு கோட்டங்களையும், அருவா, அருவாவடதலை ஆகிய இரு நாடுகளையும், வேங்கட மலையும் தன்னகத்தே கொண்டு விளங்கியது தொண்டை நாடு. வீரம் மிகுந்தவரும், யானைப் படையை உடையவருமான தொண்டையர் வாழ்ந்த நாடு.124
அத் தொண்டையர் மரபில் வந்தவன் தொண்டைமான். அதியமான் நெடுமான்அஞ்சி ஆண்ட காலத்தில் வாழ்ந்தவன். அதியமானோடு பகை கொண்டவன். தொண்டைமான் பெரும்படையும், பேரரனும் கொண்டிருத்தலை அறிந்த அதியமான் பகை தணிந்து வாழ விரும்பினான். தன் அவைப் புலவர் ஒளவையாரை தொண்டைமான் பால் தூது அனுப்பினான்.
ஒளவையை அன்புடன் வரவேற்ற தொண்டைமான், அவர்க்குத் தன் படைக்கலக் கொட்டிலைத் திறந்து காட்டினான். படைக்கலக் கொட்டிலைக் கண்ட ஒளவையார், தொண்டைமான் படைகளைப் புகழ்வார் போல் பழித்தும், அதியமான் படைக்கலங்களைப் பழிப்பார் போல் புகழ்ந்தும் பேசி அமர் ஒழிக்க வேண்டினார்.125 அதியமானும் அவன் ஆண்டிருந்த தகடூரும் அழிவுற்றதில் தொண்டைமானும் பங்கு கொண்டிருக்கக் கூடும்.