பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157


நன்னன் ஏற்றை' என்ற தொடரால் சேரன்படை முதலிகளுள் ஒருவனாக உணரப்படும நன்னன் கொண்கானத்து நன்னன், நன்னன் சேய் நன்னன், ஆகிய இருவரினும் வேறுபட்ட ஒருவனாவான், அவன் சேரர்க்கும் சோழர்க்கும் கழுமலம் எனுமிடத்தே நடைபெற்ற போரில், சேரர்க்குப் படைத்துணையளித்த நன்னனாவன். 'நன்னன் உதியன், அருங்கடிப்பாழி' என்ற தொடரால், சேரரோடு யாதோ ஒரு வகையால் உறவு பூண்டு, அதனால் 'உதியன்' என்ற சிறப்புப் பெயர் பெற்ற நன்னன், அதே நிலையில், அச்சேரரோடு பகை கொண்டு, களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரலால் உயிர் இழந்த கொண்கானத்து நன்னனே யாவன்.

இனி, மலை படுகடாம் பாடல் வழி அறியும் நன்னன் சேய் நன்னன் வரலாறு பின்வருமாறு.

பல்குன்றக் கோட்டம் மலைகள் பலவற்றைக் கொண்ட மலைநாடு. மலை வளம் நிறைந்தது. அவன் நாட்டில் உள்ள நவிரம் என்ற மலையில் காரியுண்டிக் கடவுள் என்ற திருநாமம் கொண்ட சிவபெருமான் திருக்கோயில் கொண்டுள்ளார் நன்னன் நாட்டில் பாய்ந்தோடும் ஆறு சேயாறு.130 நன்னன் இகுந்து அரசாண்ட தலை நகர் செங்கண்மா. அவன் காட்டு மக்கள் நனி மிக நல்லவராவர். அவன் நாட்டைச் சார்ந்த காட்டு வாழ் மக்களும், மலை வாழ் குறவர்களும், ஆயரும், நகர மாந்தரும் ஆண்டு வரும் புதியரை, அண்ணன் எனவும், அம்மான் எனவும் தம் மக்கட்கு முறை கூறி, விருந்தளித்துப் பேணி அன்பு காட்டுவர்131.