பக்கம்:தமிழக வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தமிழக வரலாறு


சொன்னான். இவன் வாய்மொழிப்படியே சந்திரகுப்தன் கி. மு. 321-ல் மகதநாட்டுப் பாடலிபுத்திரத்தை நோக்கிப் படை செலுத்தினான். அக்காலத்தில் அங்கு ஆண்ட நந்த அரசர்கள் வலுவற்றவர்கள் போலும்! தங்கள் பெருஞ் செல்வங்களையெல்லாம் கங்கைக்கடியில் மறைத்து வைத்துத் தாங்களும் மறைந்தார்கள் பாடலி புத்திரமே இப்போதைய ‘பாட்னா’ என்பர் சிலர். பாடலி, சோன்நதி கங்கையோடு சேருமிடத்தில் அமைக்கப்பட்டிருந்தது என்பர் ஸ்மித்து[1] அப்பாடலியில் சந்திரகுப்தனுக்கு முன் ஆண்ட நந்தர்கள், மாற்றானுக்கு அஞ்சித் தம் அரும்பெருஞ் செல்வங்களைக் கங்கைக்கடியில் மறைத்து வைத்தார்கள்.

இனி, இந்த நந்தரை வென்ற மோரியரைத் தமிழ்ப் புலவர் ‘வம்ப மோரியர்’ என்பர். ‘வம்பே புதுமை’ என்பது தொல்காப்பியம். நந்தர்கள் ஒருவேளை தமிழரொடு நட்புடையவர்களாய் இருந்திருக்கலாம். எனவே தான் தமிழ்ப் புலவர்கள் அவர்தம் செல்வத்தைப் போற்றிப் புகழ்கின்றார்கள். அவர்களை எதிர்த்துப் புதியவர்களாக வந்தவர்களை ‘வம்ப மோரியர்’ என்றார்கள். மேலும் இந்த மோரியர் தமிழ்நாடு வரையில் படை எடுத்து வந்தார்கள் என்பதையும் காட்டுகின்றார்கள். மாறுபட்ட ஒருவரை மடக்குவதற்காக மோரியர் துணை நாடப்பட்டது போலும்! இவற்றையெல்லாம் சங்ககாலப் பாடல்கள் காட்டுகின்றன. கி. மு. மூன்று நான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மாமூலர் என்னும் புலவர், இவற்றை நேரில் கண்டு எழுதுகின்றனர். ஆனால், ஒரு சிலர் மோரியரோடு


  1. The Easly History of India, By W. Smith
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/100&oldid=1357728" இலிருந்து மீள்விக்கப்பட்டது