பக்கம்:தமிழக வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தமிழக வரலாறு


சிவபெருமான் திருமணத்தின்போது அவர் தென்னாட்டுக்கு அனுப்பப்பட்டவர் என்றும், அவர் வரும் வழியில் உயர்ந்த விந்தியத்தை அடக்கித் தென்னாட்டில் புகுந்து, வில்வலன் வாதாபியை அழித்து, பொதிகையில் தங்கித் தமிழ் வளர்த்தார் என்றும் புராண மரபுக் கதைகள் கூறுகின்றன. இனி அகத்தியரே தொல்காப்பியர் முதலிய பன்னிரு புலவருக்கும் ஆசிரியர் என்றும், தொல்காப்பியரது தொல்காப்பியத்துக்கும் அகத்தியமே முதல் நூல் என்றும் இலக்கண மரபு கூறுகின்றது. புராண அகத்தியரையும் இலக்கண அகத்தியரையும் ஒன்றுபடுத்துவதால் உண்டாகும் இழுக்கே, வடக்கே இருந்து வந்த அகத்தியரே தமிழ் வளர்த்தார் என்பதற்குக் காரணமாகின்றது. கந்தபுராண வரலாறு நடந்ததாகக் கொண்டாலும் காலத்தால் மிக மிக முற்பட்டதாகும். கந்த புராண வரலாறும் முருகன் பிறப்பும் புராணத்துக்கும் பரிபாடலுக்கும் வேறுபட்டுச் செல்கின்றன. மேலும், அதே அகத்தியர் பொதியமலைக்கு வந்தார் என்பதற்குச் சான்று இல்லை. கம்ப இராமாயணத்தில் அகத்தியப் படலம் என ஒன்று வருகிறது. அதில் அகத்தியர் தட்சிண பீடபூமியினிடையே தண்ட காரணியத்தில் பிற தவசிகளோடு வாழ்ந்த அகத்தியராகவும், அவரே இராமனைக் கண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. புராண அகத்தியர் ஒரு கால் அங்கேயே தங்கினவராதல் வேண்டும். விந்திய மலைக்குத் தெற்கே இருந்த கலாசாரமும் பண்பாடும் அவரை அந்தக் காலத்தில் மேலே வரவொட்டாமல் தடுத்திருக்க வேண்டும். அதையே புராணக்காரர் மலை தடுத்தது என்று மலைமேல் ஏற்றிக் கூறிப் பின் வென்ற தாகவும் காட்டி இருக்கலாம், இந்த இராமாயண அகத்தியர் இருப்பிடம் பஞ்சவடியிலிருந்து இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/114&oldid=1357889" இலிருந்து மீள்விக்கப்பட்டது