பக்கம்:தமிழக வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழக வரலாறு


பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் சேர சோழ பாண்டியர்கள் இராவணனுக்கு மாறுபடா வகையில் வாழ்ந்த அரசர்களாய் அமைந்திருந்தார்கள் என்பதும், பெண் காரணமாக நடைபெற்ற போரில் தாங்கள் கலந்து கொள்ளாது ஒதுங்கி நின்றார்கள் என்பதும், இராமனது மனத்துயர் கண்டு இரங்கி அவன் சேனை செல்ல வழி விட்டார்கள் என்பதும் கொள்ள வேண்டுவனவாம். இராமாயணம் இல்லை எனில், இந்த ஆராய்ச்சிகளுக்கே இடமில்லை

அகத்தியர்தான் தமிழை வளர்த்தார் என்பதும் ஓரளவு புராண மரபே எனினும், அகத்தியச் சூத்திரங்கள் எனச் சில சூத்திரங்கள் கிடைப்பதால் தொல்காப்பியத்திற்கு முன் அகத்தியம் என்ற இலக்கண நூல் இருந்திருக்க வேண்டும் என்று கொள்ளல் தவறன்று. எனவே இந்த அகத்தியம் என்ற இலக்கணம் செய்தவர் பொதிய மலையில் தோன்றி வளர்ந்த தமிழ் அகத்தியரே என்று கொள்ளல் பொருத்தமுடையது.

இனி, பாரதத்திலே பாண்டியரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. தமிழ் இலக்கியத்தினாலேயும் பாரதப் போர்க்களத்தே சோறிட்டு ஒரு சேர மன்னன் ‘பெருஞ் சோற்றுதியன் சேரலாதன்’ என்ற புகழ் பெற்றான் என்பது தெரிகின்றது. ஆகவே, இராமாயண பாரத காலங்களில் தமிழ் நாடு வடநாட்டோடு தொடர்பு கொண்டிருந்ததென்றும் அத்தொடர்பால் தமிழர் தம் பண்பாடும் பிறவும் கெடா வகையில் நட்பு முறையில் சிறக்க அமைந்திருந்தது என்றும் கொள்வது பொருத்தமானதென்பது துணிவுடைத்தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/116&oldid=1357903" இலிருந்து மீள்விக்கப்பட்டது