பக்கம்:தமிழக வரலாறு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தமிழக வரலாறு


மாற்றங்களும். வாழ்க்கை முறையும், சமய நெறிகளும், பிறவும் அந்த இருண்ட காலத்தில் தமிழ்நாடு எத்தனையோ வகையான மாறுதல்களைப் பெற்று விட்டது என்பதைக் காட்டுகின்றன. இந்த இடைக்காலத்தில் பல்லவர் என்பவர் தமிழ் நாட்டில் வந்து வேறு சில வேற்றரசரோடு மாறுபட்டுக் கலாம் விளைத்துப் பின் வெற்றி கண்டு, காஞ்சியைத் தலைநகராக்கிக்கொண்டு, சில நூற்றாண்டுகள் செழிக்க வாழ்ந்தார்கள். அவர்கள் தெளிந்த அரசியல் வாழ்க்கை ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேதான் நன்கு புலனாகின்றது. அதற்கு முன் இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகவே அவர்தம் வாழ்வு தமிழ் நாட்டில் இருந்த தாயினும், அவ்வளவு சிறக்கவில்லை. களப்பிரர், கடம்பர் போன்ற வேற்று நில வேந்தரோடு புதியராய் வந்த இந்தப் பல்லவரும் மாறுபட்டு நின்று வெற்றி காண வேண்டி இருந்தது. அதற்கிடையில் அவர் தம் இருண்டகால வாழ்க்கையைப்பற்றித் திட்டமாகக் கூற இயலாது.

பல்லவர் யார்?

இந்தப் பல்லவர் தமிழ் நாட்டில் இருண்ட காலத்தில் புகுந்தாரேனும், என்று வந்தவர் என்பது திட்டமாகச் சொல்ல இயலாது. சிலர் இளந்திரையன் வரலாற்றை இவர்களோடு இணைத்து, அவன் பரம்பரையினரே பல்லவர் என்பர். இளந்திரையன் நாக கன்னிகையால் கொடிகளாலே சுற்றி அனுப்பப் பெற்றவன் என்பது கதை. கொடிகள் ‘பல்லவம்’ என்னும் பெயரைப் பெறுவதால் பல்லவத்தால் கட்டுண்டு வந்த இளந்திரையன் பரம்பரையினரே பல்லவர் என்பர் சிலர். அவர் கூற்றுப் பொருந்துவதாக இல்லை.இளந்திரையன் தமிழ் மன்னன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/174&oldid=1358135" இலிருந்து மீள்விக்கப்பட்டது