பக்கம்:தமிழக வரலாறு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

தமிழக வரலாறு


வரும் அறியாதிரார். மறைந்த பல்லவரை வாழ வைத்த அந்தக் கற்கள் — பாறைகள் — அவற்றின் சிற்பங்கள் ‘நீடு வாழ்க’ என வாழ்த்தி மேலே செல்லலாம்.

பல்லவர் காலத்துத் தமிழகம்

பல்லவர் காலத்தில் நாடு பல்வேறு வகைகளாக ஆட்சி முறைக்காகப் பிரிக்கப்பட்டிருந்தது. பெரு நாடுகள் இராட்டிரங்களாகவும் (மண்டிலம்), ஒவ்வொரு இராட்டிரமும் பல விடயங்களாகவும் (கோட்டங்கள்) விடயங்கள் இன்னும் சிறு பிரிவுகளாகவும் பிரிக்கப் பெற்றிருந்தன. அவர்கள் காலத்தில் கோட்டம், நாடு, ஊர் முதலிய பெயர்களும் வழக்கத்தில் இருந்தன என அறிகின்றோம். எனவே, பல்லவ மன்னர் ஆளும் நலத்திற்கு ஏற்ப நாட்டைப் பல்வேறு வகையில் பிரித்து நல்ல வகையில் அரசாண்டார்கள் எனக் கொள்ளல் வேண்டும். சங்க காலத்தில் இருந்தது போன்றே அரச முறையிலும் தந்தைக்குப்பின் மகன் என்ற முறையே பெரும்பாலும் கையாளப்பெற்று வந்தது. சங்க காலத்தில் தமிழ் மன்னர்கள் கொண்டிருந்தமை போன்றே பல்லவரும் கொடியும் இலச்சினையும் பிற சிறப்பியல்புகளும் பெற்றிருந்தனர். பல்லவர் கொடி ‘நந்திக் கொடி’. இலச்சினையும் அதுவேயாகும். நந்தி யிலச்சினையைக் கொண்டே பல்லவருள் பெரும்பாலோர் சைவராய் இருந்தனர் எனக் கொள்ளலாம். வைணவ சமயத்தைச் சார்ந்த சிலரும் அதே கொடியும் இலச்சினையும் கொண்டிருந்தார்கள் என்பதையும் அறிய வேண்டும். சங்க காலத்தில் இருந்தமைபோன்றே பல்லவர் தம் அரசியல் காரியங்களைக் கவனிக்கப் பல உட்படுகருமத் தலைவரும் இருந்தார்கள் எனக் காண்கின்றோம். அரண்மனையில் அரசரையும் அவர்தம் உரிமைச் சுற்றத்தாரையும் ஓம்பும் பணியாளரும், நாட்டு மக்களிடம் கடமையைச் செய்யும் பணியாளரும், பற்பல வகையில் பற்பல விதமாகப் பல்லவர் ஆட்சியில் பணி புரிந்து நின்றனர் என்பது கல்வெட்டுக்களாலும் சாசனச்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/210&oldid=1358575" இலிருந்து மீள்விக்கப்பட்டது