பக்கம்:தமிழக வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

தமிழக வரலாறு


பல தானங்கள் செய்தான். ஏம கர்ப்பம்[1], துலா பாரம்[2] முதலியவகையில் தானம் புரிந்தான். இவை அக்கால அரசரும் அரசியரும் சாதாரணமாகச் செய்த தருமங்களாகும். இவன் புலவர்களை ஆதரித்தமையின் ‘பண்டித வற்சலன்’ என்ற பட்டம் பெற்றான். நான்கு புதல்வரும் இரு மகளிரும் இவனுக்கு இருந்தனர். இரண்டாம் மகன் கண்டராதித்தனே இவனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தான்.

கண்டராதித்தன்:

பராந்தகன் பரகேசரி யானமையின், கண்டராதித்தன் இராசகேசரியானான். இவன் காலத்தில் வீரபாண்டியன் இழந்த நாட்டை மீட்டுக்கொண்டான். இவன் ஆட்சி ஏழு ஆண்டுகளே (950-56). அதிலும், தந்தைக்குப் பின் மூன்றாண்டுகளே இருந்தான். எனவே, இவன் செயல் பற்றி அதிகம் அறிய வழியில்லை. இவன் சிறந்த சைவன்; எனினும் சமணப் பள்ளியையும் அமைத்தான் என்பர். இவன் பாடிய பாடற்றொகுதி திருவிசைப்பாவில் இடம் பெற்றுள்ளது. இவன் ‘மும்முடிச் சோழன்’ எனவும் ‘சிவஞான கண்டராதித்தர்’ எனவும் வழங்கப் பெறுகின்றான். இவனுக்குப் பின் இவன் தம்பியும் பராந்தகனுடைய மூன்றாவது மகனுமாகிய அரிஞ்சயன் ஓராண்டே ஆட்சி செய்துள்ளான் (கி.பி. 956-57). இவன் பரகேசரி. இவன் வடக்கே இரண்டொரு போர்கள் செய்தான் என்றாலும்,


  1. பொன்னால் பசுவினைச் செய்து அதன் வாய்வழி நுழைந்து பின் வழி வெளி வந்து அப்பொற்பசுவை அந்தணருக்குத் தானம் செய்வது.
  2. துலையில் தான் ஏறி நின்று, தன் எடைக்குச் சரியாகப் பொன்னை நிறுத்து, அப்பொன்னை அந்தணருக்குத் தானம் தருவது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/224&oldid=1358753" இலிருந்து மீள்விக்கப்பட்டது