பக்கம்:தமிழக வரலாறு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

தமிழக வரலாறு


தமிழ்நாட்டு நிலைபற்றிய இப்பகுதியை முடிப்போம். பேராசிரியர் துப்பராயில் என்பவர் தமிழ் நாட்டுக் கோயில்களின் கலைவளர்ச்சியைக் கூறும்போது, பல்லவர் காலத்தில் (600–850) குடைந்த குகைக் கோயில்களும், முதற்சோழர் காலத்திய (950-1100) விமானங்களும், பிற்சோழர் காலத்து (1100–1250) அழகிய கோபுரங்களும், விசயநகர வேந்தர் காலத்து (1350–1600) மண்டபங்களும், பிற்காலத்து (1600க்கு பின்) அழகிய நாற்புறச் சுற்றுத் தாழ்வாரங்களும் சிறந்தன எனக் காட்டுகின்றன.[1] எனவே பல்லவ சோழரைப் போன்று விசயநகர வேந்தரும் தமிழ் நாட்டில் பலப்பல கோயில்களுக்கு மண்டபங்களும் பிற கலை நலம் தோய்ந்த கட்டடங்களும் கட்டியிருக்கிறார்கள் என்பது தெளிவு வேலூர்க் கோட்டைக் கோயிலின் மண்டபம் இக்காலத்தில் கட்டப்பெற்றது. காஞ்சி ஏகாம்பரநாதருடைய 188 அடி உயரமுடைய கோபுரம் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பெற்றது. வரதராசர் கோயிலின் கலியாணமண்டபம் (540 கால்கள்) இக்காலத்ததே. சிதம்பரம் கோயிலில் பல புதிய திருப்பணிகள் இக்காலத்தில் செய்யப்பெற்றன. வடக்குக் கோபுரப் பெரும்பணி கிருஷ்ணதேவராயராலே கட்டிமுடிக்கப் பெற்றது. அதில் அவருடைய உருவமும் பொறிக்கப் பெற்றுள்ளதாம். அதன் ஆயிரங்கால் மண்டபம் இக்காலத்தில் கட்டப்பெற்றதே. சிதம்பரம் கோயிலில் இருக்கும் சிவகாமி கோயிலுக்கு வடபுறத்து அமைந்த அழகிய சண்முகர் கோயிலும் இக்காலத்தில் கட்டப் பெற்றதே எனக்கொள்ள இடமுண்டு.


  1. Dravidian Architecture p. 83.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/322&oldid=1359187" இலிருந்து மீள்விக்கப்பட்டது