பக்கம்:தமிழக வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்று மூலங்கள்

43


மேநாட்டு மெகஸ்தனிஸ் தொடங்கிச் சீன யாத்திரிகன் மாயூன் வரையிலே[1] வந்து சென்ற பழங்கால வெளிநாட்டு மக்களின் குறிப்புக்கள் அனைத்தும் அதில் இடம் பெறுகின்றன. மேலை நாடுகளாகிய கிரேக்க உரோம நாட்டு வணிகர்கள் தொடங்கி, கீழை நாடுகளாகிய சீனம் முதலியவற்றிலிருந்து வந்த சமயத் தலைவர்கள் வரை வரிசைப்படுத்தி அவரவர் தென்னாட்டைப்பற்றிக் கூறியவற்றைத் தொகுத்துள்ளார் அக்குறிப்புக்கள் அனைத்தும் தமிழ் நாட்டு வரலாற்றை அறியப் பெரிதும் பயன்படுகின்றன. தற்பெருமைக்கு நாணித் தன்னைப் பற்றி உயர்த்திக் கூறிக்கொள்ளாத பண்பட்ட வாழ்வு வாழ்ந்த தமிழன் பெருமைகள் பலவற்றை இவ்வெளி நாட்டார் குறிப்புக்கள் வெளியிடுகின்றன. உயர்ந்த பல கட்டடங்கள், அவற்றை அமைத்த மன்னர்கள், அவர் தம் அறநெறி பற்றிய ஆணைகள், அவர் காலத்தில் இருந்த சமய நெறிகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையெல்லாம் தெள்ளத்தெளிய விளக்கும் பல குறிப்புக்கள் அவற்றில் காணக் கிடைக்கின்றன. தமிழ் நாட்டைப் பற்றிப் பிறர் கூறும் குறிப்புக்களே வரலாற்றுக்கு உரமுடையனவாகலின் இவை தமிழ் நாட்டு வரலாற்றுக்கு உறுதுணையாக அமைகின்றன.

நில அமைப்பு முதலியன :

மேலே கண்ட இத்துணை மூலங்களேயன்றி வேறு பலவும் வரலாற்றுக்குத் துணை புரிகின்றன. நில அமைப் பும், தோற்ற வளர்ச்சியும், அப்பரப்பில் உயிர் வாழும மக்களும் வாழ்ந்த வரலாறும் வரலாற்றுக்கு உதவுவனவே. இந்நில் நூல் மாத்திரமேயன்றி, அவ்வக்காலத்து வழங்கிய போர்க்கருவிகளும் பிற பொருள்களும் குறிப்பேடுக்ளும் வரலாற்றுக்கு உதவுகின்றன. தமிழ் நாட்டு வரலாற்றுக்கு உதவும் இத்துணைப் பொருள்களின் உதவியினால் இந்நாட்டு வரலாற்றை ஒருவாறு அறுதியிடக் கூடும் என்ற துணிவில் மேலே செல்லலாம்.


  1. From Megasthenes to Mahuan
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/45&oldid=1357209" இலிருந்து மீள்விக்கப்பட்டது