பக்கம்:தமிழக வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலநூலும் வரலாறும்

45


ஆசிரியர்களெல்லாம் இந்தப் பரந்த நிலப்பரப்பின் தொடர்ந்த நிகழ்ச்சிகளைத் தாமே தம் உருட்டுக் கருவிகளாக உபயோகிக்கின்றனர். எனவே இந்த நில உலகமே வரலாற்றுக்கு அடிப்படை. வரலாற்றை முறைப்படி ஆயுமுன் இந்நிலவுலகத் தோற்ற வளர்ச்சி வரலாற்றையும், இந்நிலம் வரலாற்றுக்கு எத்துணை உதவுகின்றதென்பதையும் ஆராய்தல் இன்றியமையாததாகும்.

வரலாற்று இடம்

இந்நிலம் என்று தோன்றியதென்பதை யாரும் திட்டமாக வரையறுக்கவில்லை. இதன் எல்லை அண்ட கோள எல்லையின் எத்துணைப் பகுதி என்பதையும் திட்டமாகக் கணக்கிடக் கூடவில்லை. இவ்வுலகு சூரியனிலிருந்து சிதறிய ஒரு சிறு பொறி என்றும் அந்நெருப்புருண்டை மெள்ள மெள்ள ஆறி இன்றைய நிலை பெற்று உலகமாயிற்றென்றும் கூறுவர் ஆய்வாளர். வான ஓடையில் உலவி வரும் எத்தனையோ உருண்டைகளில் இந்நில உலகமும் ஒன்றாகும். இதன் ஆயுளை 200 கோடி ஆண்டுகள் என்றும் 80 கோடி ஆண்டுகள் என்றும் சிலர் கணக்கிடுகின்றனர். இன்னும் சிலர், அவ்வெல்லை உயிர்த்தோற்றத்தின் எல்லை என்றும் நிலம் அதற்கும் நெடுங்காலத்துக்கு முன்னமே தோன்றியது என்றும் கூறுவர்: எப்படியாயினும், மனிதனது நினைவு ஆற்றலைக் கடந்த காலக் கணக்கிலே தான் இந்நிலவுலக ஆயுள் அமைகின்றது என்பது தேற்றம். அதைப் போன்றே அகன்ற அண்ட முகட்டில் இதன் எல்லையும் மிக நுண்ணியதாகும். அகன்ற அண்ட கோள எல்லை பரந்த ஐங்கடல்களுமாயின், நிலம் ஒரு சிறு திவலை எனலாம். இந்த மிகச் சிறிய உலகமே மிகப் பெரிதாக-நம் வரலாற்று இடமாக-அமைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/47&oldid=1357227" இலிருந்து மீள்விக்கப்பட்டது