பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏரினை வயல்நி றுத்தி
எழுந்தோடிப் பொன்னன் வந்தான்;
வார்புனல் சிரித்து நிற்கும்
தாமரை மலரைக் கொய்தான்;
பார்த்திட்டான் சுற்று முற்றும்;
தமிழச்சி பக்கல் சார்ந்தான்;
"கார்குழற் கேற்ற திந்தா
காதலின் பரி(சு)"என் றானே!3

தலைசாய்த்து நாணிக் கோணித்
தமிழச்சி நின்றி ருந்தாள்;
"கொலையெலாம் கற்ற உங்கள்
கூர்விழிக்(கு), அடடா! சேலைப்
புலவர்கள் உவமை சொல்வார்;
பொருத்தமோ?" என்றான்; வாய்க்கால்
அலையினைப் பார்த்த வண்ணம்
தமிழச்சி அசையாள் ஆனாள்!4

"இலுப்பையைக் கோதும் செங்கண் இன்னிசைக் குயிலும், இங்கே
உலுத்தநீள் மொட்டைத் தென்னைப் பொந்தில்வாழ் கிளியும் உன்சொல்
பலகற்றுக் கொள்ளு மென்றோ
பவளவாய் பூட்டி விட்டாய்?
விலையிலா மணியே இஃது
விரிமனப் பண்போ?" என்றான்.5

2