பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீரலை பட்டுப் பட்டு
நின்றசைந் தாடு கின்ற
பேர்போன கும்ப கோணப்
பித்தளைக் குடமெ டுத்தாள் ;
நீரினைக் குனிந்து மொண்டாள்;
நெடுமூச்சு விட்டாள்; எங்கோ
பார்ப்பவள் போலக் கொல்லன்
பணையொக்கும் அவன்தோள் பார்த்தாள்!

6

கண்ணினால் செலவு கூறித்
தமிழச்சி கரையில் ஏற
எண்ணிடும் வேளை, பொன்னன்
இருகையால் வழிம றித்தான் !
"பெண்ணே! நீ வாய்தி றந்து
பேசடி! மணந்து வாழும்
எண்ணத்திற்(கு) என்சொல் கின்றாய் ?
பொறுத்தது போதும்!"என்றான்

7

                      
சிரித்திட்டாள் ; செப்ப லுற்றாள்
தமிழச்சி அவனைப் பார்த்தே:
"பொரியுண்டை எனஉம் முள்ளே
பெண்களை நினைத்தீர் போலும்!
இருநான்கு பொழுதிற் குள்என்
எண்ணத்தைக் கேட்க வந்தீர் ;
இருமும்மைத் தீர ஆய்ந்(து)என்
எண்ணத்தை உரைப்பேன்" என்றாள்.

8
3