பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாட்டியைத் தளிர்க்கை யாலே
தமிழச்சி பற்றிச் சொல்வாள்:
"ஆட்டிட ஆடு கின்ற
பாவைநான் அல்லள்;சற்றுப்
பாட்டையில் நடந்தால் என்ன?
பலருடன் பழகிப் பேசி
வீட்டிற்கு வந்தால் என்ன?
விழிப்புண்டு கற்பில்; பாட்டி!14


"வேலையை முடித்த பின்னர்
வீட்டினில் பெண்கள் நல்ல
கோலங்கள் போட வேண்டும் ;
குழந்தைக்கு நல்ல நல்ல
நூலினால் சட்டை தைக்க,
நூற்றிடப் பழக வேண்டும்;
மேலான கதைகள் சொல்லிச்
சிறுவரை வளர்க்க வேண்டும்;15


"மாலையில் சிறிது நேரம்
மயில்போல உலவ வேண்டும்;
பாலினைக் கறக்கக், காய்ச்ச,
உறையிடப் பழக வேண்டும்;
ஏலவே இவைசெய் யாரேல்
என்பயன் பெண்க ளாலே?
நாலுபேர் நகைக்கத் தக்க
செயல்செய்து கெடுதல் நன்றோ?16


6