பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தட்டாது சேரிப் பேச்சைத்
தமிழச்சி கேட்டி ருந்தாள் ;
வட்டமாய்த் தன்னைச் சூழ்ந்த
மக்களைப் பரிவாய் நோக்கிக்,
"கெட்டதை உங்கட் காகக்
கிஞ்சிற்றும் நினைக்க மாட்டேன்;
சட்டதிட் டங்க ளல்ல ;
சற்றென்சொற் கேட்பீர்!" என்றாள் :

37


"கல்லின்கீழ்ச் செடியைப் போலக்
காலத்தைக் கடத்தி விட்டீர்!
செல்வத்தை ஆண்டான் துய்க்க
வயலினில் உழைத்தீர் ; தேய்ந்தீர் !
செல்வத்தை ஆக்கு வோர்கள்
தீராத பசியில் வாடல்
நல்லதோ ? எண்ணிப் பாரீர் !
நலிவெலாம் உமக்கே தோன்றும் !

38


" சேரியைத் திரும்பிப் பாரீர்!
குடிசையில் தெரியும் வானம் !
சேரிக்கு நல்ல தண்ணீர்க்
கிணறுண்டா? சிந்தி யுங்கள் !
மாரிக்குக் கோயில் கண்டீர்!
மண்விளக்(கு) அங்கொன் றுண்டா ?
ஊருக்கு நீங்கள் போகும்
பாட்டைதான் ஒழுங்கா ? சொல்வீர் !

39
15