பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓடையின் மருங்கி ருக்கும்
நாணலின் ஓர மாகப்
பேடையைக் காணாங் கோழி
பின்னிருந் தழைக்கப் பொன்னன்
சாடையாய்ப் பார்த்தான்; ஆங்கே
தமிழச்சி வந்து சேர்ந்தாள்;
"ஏடிஇந் நேரம்?" என்றான்.
"இடைவழி கோணல்!" என்றாள். 49

மடியினில் இருந்த முல்லை
மாலையை எடுத்தான் பொன்னன்;
"நெடியவேல் விழியாய்! சற்றே
நில்!” என்றான்; பரிதி வாழ்த்தித்
தொடையலை அவள்க ழுத்தில்
சூட்டினான்! தோள்கள் விம்மக்
கடைக்கணித் தாள்;சி ரித்தாள்!
கலந்தன இரண்டு நெஞ்சம்! 50

ஓடைநீர் புல்லில் பாயும்
ஓசையும் இனிது கேட்கும்;
வாடையில் தோய்ந்த தென்றல்
வண்டிசை கொணரும்! அங்கே
ஆடையை இழுத்துப் போர்த்தும்
அன்னத்தைப் பொன்னன் நோக்கி,
"ஏடி!நீ பேச வில்லை?
எதைநினைக் கின்றாய்?" என்றான். 51

20