பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"தலைவாரிக் கொள்வாய்; நல்ல
தாவணி கட்டு; வேடன்
சிலைநிகர் புருவம் மையால்
தீட்டடி!" என்றாள் அன்னை.
தலையினை ஒடிப்பாள் போலத்
தமிழச்சி முகம்தி ரும்பி,
"மலைவய லாக மாறும்;
என்மனம் மாறா(து)!’’ என்றாள். 62


தந்தையின் 'வாங்க' என்னும்
குரலினைக் கேட்டுக் கள்ளின்
மொந்தைபோல் முகமபா ழாகத்
தமிழச்சி ஒளிந்து நின்றாள்.
வந்தஆண் பெண்கட்(கு) எல்லாம்
வரிசையாய் நீரை மொண்டு
தந்தனள் அன்னை; வந்தோர்
சாப்பிட இலைவி ரித்தாள்.63


வந்தவர் ஊரில் கண்ட
வளப்பத்தைப் பேசி உண்டார்;
முந்திய முறையைச் சொன்னார்;
முப்பாட்டன் வகையைச் சொன்னார்;
இந்தநற் சம்பந் தத்தால்
ஏற்படும் பயனைச் சொன்னார்;
சந்தெப்போ கிடைக்கும் என்று
தமிழச்சி காத்தி ருந்தாள்!64

25