பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அண்டையில்-அயலில்-வாழ்வோர்,
அவ்வூர்நாட் டாண்மைக் காரர்
உண்டியை இடித்த பின்னர்
உட்கார்ந்தார்! "பெண்ணுக் காகச்
சண்டையின் வேண்டாம்; இன்றே
தருவதை விளக்க மாக
விண்டிட வேண்டும் !’’ என்றார்
பெண்கேட்க விரும்பி வந்தார்.

65


'நமக்குள்ளே குணம்கு லத்தை
நாம்பார்க்கப் போவ தில்லை;
தமக்கையின் மகனுக்(கு) இங்குத்
தடங்கலோ ? வரிசை எல்லாம்.
உமக்குநான்சரியாய்ச் செய்வேன்!"
என்றனன் தந்தை; "உம்சொல்
சுமந்திட நானி ருக்கத்
துயரேனோ?"என்றாள் அன்னை.

66


"மாப்பிள்ளை சொல்லு கின்றான்;
வந்ததாம் கடிதம் நேற்று
'காப்புநா லாறு பொன்னில்;
கழுத்துச்சங் கிலிமூ வாறு;
சாப்பிடக் - கைய லம்ப-
வெள்ளியில் தட்டு முட்டு;
மாப்பிள்ளை விரலுக் கேற்ற
மோதிரம் வயிரக் கல்லில்!

67
26