பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பனுக்(கு) இரண்டு வேட்டி,
அன்னைக்குச் சேலை ஒன்று,
செப்பினில் வார்த்தெ டுத்த
சிலையொத்த பாப்பாத் திக்குக்
கொப்பொன்று சீட்டிச் சேலை,
குங்குமப் பெட்டி ஒன்று
கப்பலை விட்டி றங்கி
வாங்கிறான் கடையில்; பின்னும்-

93


மலைவாழைச் சீப்பு நாலு,
மாம்பழம் நாலி ரண்டு,
கலைக்குறி மூங்கிற் காம்பு,
கைக்குடை, சோப்புச், சீப்புத்,
தலைமயிர்க்(கு) எண்ணெய்,சின்ன
தம்பிக்குத் தொடுதோல், சட்டை
விலைபேசி வாங்கிக் கொண்டான்;
புறப்பட்டான் வீட்டை நோக்கி.

94


வழியினில் காணு கின்ற
மரமெலாம் அவளைக் காட்டும்;
சுழித்தோடும் ஆற்றுத் தண்ணீர்
அவள்கன்னம் சுழியைக் காட்டும்;
அழகிய கண்கள் வீச்சை
அவ்வாற்றுச் சேல்கள் காட்டும்;
விழிநகை நீலம் அல்லி
மேனியைத் தளிர்கள் காட்டும்!

95
37