பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவையெல்லாம் கண்டு குப்பன்
‘என(து)இன்பக் காத லிக்குச்
சுவைபடப் பட்டா ளத்தே
வாழ்ந்ததைச் சொல்வேன்; பின்னர்
அவள்எனைப் பிரிந்தி ருந்த
நாட்களில் அவள டைந்த
கவலையைச் சொல்லக் கேட்பேன்;
கண்ணீரைத் துடைப்பேன்!' என்று

96


தன்னுள்ளே எண்ண மிட்டான்;
தன்வீடு வந்து சேர்ந்தான்;
அன்னையைத் தழுவிக் கொண்டான்;
அப்பனின் கால்ப ணிந்தான்;
முன்தனக் காக வந்து
முற்றுகை இட்டு நிற்கும்
சின்னவர் பெரியோர்க் கண்டு
சிரித்தவர் நலத்தைக் கேட்டான்.

97


பாப்பாத்தி நலத்தைக் கேட்கப்
பறந்தது நெஞ்சம்! கொம்புச்
சீப்(பு)எட்டிப் பார்க்கும் சட்டைப்
பைக்குள்ளே சிங்கம் போட்ட
தீப்பெட்டி எடுத்தான்; வீட்டுச்
சிறுவனைக் கூட்டிக் கொண்டு,
'தோப்பிற்குச் செல்வ தாக’
அன்னைக்குச் சொல்லிப் போறான்.

98


38