பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"சேரிக்கு நன்னாள்இன்று!
சேருங்கள்; ஒருகை பார்ப்போம்!
ஊரார்கள் நம்மை எல்லாம்
உமிஎன நினைத்தார் போலும்!
சேரியின் திறத்தைக் காட்டித்
திருநாட்டைப் பசியே இல்லா
ஓர்பொது வுடைமை நாடாய்
உருவாக்கப் புறப்ப டுங்கள்! 147


"நம்மவர் வாழ வேண்டும்;
இன்றேல்,நாம் வீழ வேண்டும்!
சும்மாநாம் அடங்கிப் போனால்
சோம்பர்கள் துளிர்த்துப் போவார்!
உம்மரும் வீரம் கேட்(டு)இவ்
உலகமே வியக்க வேண்டும்!
இம்மியும் கலங்க வேண்டாம்!
எல்லோரும் புறப்ப டுங்கள்! 148


என்றனன் மதுரை வீரன்.
எழுந்தது புலியார் கூட்டம்!
கன்றுகள், ஊரார் எல்லாம்
கலங்கினார்! சேரித் தோப்பு
மன்றத்தில் ஊரார் எல்லாம்
வரிசையாய்க் கட்டப் பட்டார்!
"இன்றன்று தீர்ப்பு;நாளை!
இரும்!"என்றார்சேரி மக்கள்! 149


‌ 58