பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஊரினில் உள்ளோர் எல்லாம்
கட்டுண்டு குருதி பாயச்
சேரியில் தலைகு னிந்து
செத்தாரைப் போலி ருந்தார்;
நேராக ஒவ்வோர் ஆளைத்
தமிழச்சி நிமிர்த்திப் பார்த்துச்
"சூரர்கள்!"என்றாள்; மற்றோர்
'தூ'என உமிழ்ந்தார் அந்தோ!152


"சரியம்மா!இவர்கட் கென்ன
தீர்ப்பும் சாற்று கின்றாய்?
எரியிட்டார் குடிசை கட்கே;
எங்களைக் கொல்ல வந்தார்;
உரியதைச் செய்வாய் அம்மா!
உன்னிச்சை எதுவோ அஃதே
பெரி(து)!”என்றார் சேரி வாழ்நர்!
தமிழச்சி பேச லானாள்:153


என்னரும் சேரி யாரே!
எழில்மிக்க தோழி மாரே!
பொன்,பொருள்,நிலங்கள் எல்லாம்
பொதுவாகச் செய்து விட்டால்
இன்னலே மக்கட்(கு) இல்லை!
ஏற்றமும் தாழ்வும் இல்லை!
மன்னிய பசியும் இல்லை!
வஞ்சமும் கொலையும் இல்லை!154

60