பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஒல்லாத கருத்தை எல்லாம் ஒதுக்கியே தள்ள வேண்டும்! கல்வியை முதியோர், ஆண்,பெண் கருத்தாகக் கற்க வேண்டும்! செல்வர்கள் என்ற பேரைத் திருநாட்டில் நீக்கி, எல்லாம் வல்லவர் என்ற பேரை நம்மக்கள் வாங்க வேண்டும்! 158

"அண்டையில் உள்ள சேரி, அதற்கடுத்(து) இருக்கும் சிற்றுார் தொண்டர்கள் சொல்ல வேண்டும்! துயர்நீக்க முனைய வேண்டும்! சண்டைக்கு வருவார் செல்வர்; நமைத்தாழ்த்த நினைப்பார் என்றும்! பெண்டுகாள்! சீறி அந்தப் பித்தரைத் துரத்த வேண்டும்! 159

"பிறநாட்டுக் கலையில், வாழ்வில் பிடித்ததைக் கொள்ள வேண்டும்! பிறநாட்டில் அறிஞர் தந்த பெருநூலைக் கற்க வேண்டும்! அறங்கூட்டும் வள்ளு வன்நூல், அகப்பாட்டுப், புறப்பாட் டெல்லாம் பிறநாட்டிற்(கு) உதவி உங்கள் பெற்றியை நாட்ட வேண்டும்! 16O

                62