பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10



நஞ்சினால் நெஞ்சும், தேனால்
நாவையும் நயக்கப் பெற்றோன்,
வஞ்சனைப் புரியத் தக்க
வகைக்கொரு வாய்ப்பைக் காண,
அஞ்சுவ தஞ்சி வாழும்
அப்பனின் வீட்டில் நாளும்
நெஞ்சுரம் மிஞ்சி வந்து
நிலையாகக் குந்த நேர்ந்தான்.

முகிலொத்துப் பொழிவான் சொல்லை;
முத்தமிழ் மோக மூட்டிப்
பகலொத்து விளக்கம் செய்வான்;
பரம்பொருள் படிவம் பற்றி
நகலொத்துப் பதிப்பான் நெஞ்சில்;
நகைச்சுவை உதிர்ப்பான்; நாடின்
'அகிலத்தில் அய்ய னைப்போல்
அறிந்தோர்யா ரப்பா?' வென்ன.

'பாலாறு பயிரில் பாயும்
பான்மையாய்ப் பகல்பா திக்கும்
மேலாறு வாரம் வாழ்வில் -
மிகவும் நன்'றெனுமோர் நாளில்,
சேலேறித் துள்ளும் கால்வாய்ச்
சேரிவாழ் கிழவன் செங்கன்
கோலாற வூன்றிக் கும்பிக்
குறைதீர்க்க நின்றான் வந்தே!

தமிழனாய்ப் பிறந்தும், வாழ்வில்
தாழ்ந்ததால் தாழ்த்தப் பட்டோன்,
அமிழ்ந்ததன் துயர வாரிக்
கமைந்தநற் கரையா யன்பு
கமழ்ந்திடும் அப்பன் வீட்டுக்
கடைநிற்கக் கண்ட அய்யன்
உமிழ்ந்தனன் காறித் 'தூரம்
ஒதுங்கடா நாயே', என்று.