பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2 செங்கனின் சீற்றம்

அங்கையில் காய்ப்புக் காய்க்க,
அழகாக வரப்பைச் சீவிக்
குங்குமக் குழைச்சே றாகக்
குறைவற வுழுது நட்டுக்
கங்குலில் நீரைப் பாய்ச்சிக்
காத்துநெல் விளைத்துக் காய்ந்த
செங்கனின் புருவம் வில்லாய்ச்
சிவந்தன கண்ணும் அம்பாய்!

"அப்பனின் வீடொன் றன்றி
அயலிட மாயி ருந்திம்
முப்பது வருடத் திற்கும்
முன்னிதை மொழிந்தி ருந்தால்,
தப்பிடா துதட்டைச் சேர்த்துத்
தைத்துவிட் டிருப்பே" னென்று
செப்பினா னல்லன்; செங்கன்
சிந்தைதான் கொதித்த தெண்ணி!

மல்லிகா, - நோற்றுப் பெற்ற
மகள்குழல் மணக்கு மாறாய்க்
கொல்லையில் நட்டுக் கோலக்
கொழுந்தோடிப் படர வுள்ள
முல்லைக்குப் பந்தல் போட்டு
முடிந்ததும், முகம்ம லர்ந்து
மெல்லவந் தமர்ந்தா னப்பன்
மேனியைத் துடைத்த வாறே.

அழகிய பிரம்புச் சேரில்
அய்யனங் கமர்ந்தி ருந்தும்
ஒழுகிய கண்ணீர், உள்ளம்
ஊதெரி உலையா யுள்ள
பழகிய கிழவன் றன்னைப்
பரிந்துபார்த் தன்பா "யின்று
முழுகியதென்ன? செங்கா!
முகம்வாட்ட முறலே" னென்றான்.