பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17

‘அமிழ்தினும்‌ அரிய’ தென்றிவ்
வகிலமா ராய்ந்து போற்றும்‌
தமிழ்திரு நாட்டில்‌ தோன்றித்‌
தமிழராய்‌ வாழ்ந்தும்‌, தம்பால்‌
கமழ்தரும்‌ கல்வி, செல்வம்‌
காணாரைக்‌ கடைய ராக்கி
உமிழ்ந்ததம்‌ பலம்போ லொட்டா
தொதுக்கினா ருயர்ந்தோ’ ரென்பர்‌.

வலையரென்‌ றொதுக்கப்‌ பட்டார்‌
வளநெய்தல்‌ நிலத்தி னோர்கள்‌;
புலையரென்‌ றொதுக்கப்‌ பட்டார்‌
புகழ்மரு தத்தி னோர்கள்‌;
மலையரென்‌ றொதுக்கப்‌ பட்டார்‌
மல்குபூங்‌ குறிஞ்சி மக்கள்‌;
கொலைஞரென் றொதுக்கப்‌ பட்டார்‌
கூர்ம்பரல்‌ பாலை வாழ்நர்‌!

ஆரியர்க்‌ ககத்தைத்‌ தந்தோர்‌
ஆத்திக ரானார்‌; அல்லார்‌,
பூரியா்‌, புலைய ரென்றே
பொறுப்பின்‌றி வெறுக்கப்‌ பட்டுச்‌
சேரிய ரானார்‌, செல்வம்‌
சேர்த்திட இயலா வாறிப்‌
பாரியல்‌ தமிழர்‌ வாழ்வு
பழங்கதை யாயிற்‌ றின்று!

துடிக்கின்ற மீசை போச்சு;
துட்டரின்‌ கன்னம்‌ வீங்க
இடிக்கின்ற வீரம்‌ போச்சின்‌
றில்லாதார்க் கிரங்கி வாரிக்‌
கொடுக்கின்ற ஈகை போச்சு;
குறிக்கோளாய்ப்‌ புறநா னூறு
படிக்கின்ற பழக்கம்‌ போச்சு;
பண்பாடும்‌ பாழாய்ப்‌ போச்சு!