பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22

முகத்திலே ஒளிரும் கண்கள்;
மொழியிலே முகிழ்க்கும் வாய்மை;
சுகத்திலே சொக்கிச் சோராச்
சுதந்திரக் கட்டுப் பாடு;
நுகத்திலே பகல்போல் காணும்
நுண்ணிய நூலா ராய்ச்சி;
அகத்திலே ஆர்வம் பூத்த
அணங்கினை ஆய்ந்தான், கண்ணன்.

மின்னொளி மேனி யாய்க்கார்
மேகமும் குழலாய் மேவப்
பொன்னவிர் குவளை பூத்துப்
பொலிமதி முகமாய்ப் 'பூவில்
அன்னமே' யென்னக் கண்முன்
அழகொருங் கியைந்து, பெண்மை
புன்னகை புரியும் போக்கில்
புதுப்பொருள் பொருந்திற் றன்றே.

பிறப்பினில் ஆண்மை பெண்மை
பேரெழில் பருவ மெய்தின்,
சிறப்பினில் சேர்ந்து வாழச்
சிந்தனை முந்தும் போலும்!
பொறுப்பினில் பொலியும் நீலா
புன்னகை புரிந்த இந்தக்
குறிப்பினில், இதுவொன் றன்றிக்
கூற்றவே றிலையென் றோர்ந்தான்.

கற்றிடுங் கல்வி யொன்றிக்
கவினொடு கருத்து மொன்றி,
உற்றிடும் இன்ப துன்பத்
துதவியொத் தாசை யொன்றிப்
பற்றிடும் பழக்கம், பாங்கு,
பண்பாடு, - பலவு மொன்றி
முற்றிடும் பொழுது காதல்
முளைவிடும் போலு மம்மா!