பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40

கட்டிய கட்டை விட்டுக்

காலையில் திரிய வைத்தும்

பட்டியில் பயின்ற மாடு

பழக்கத்தின் பயனுய்ப் ‘பந்தம்

விட்டது, கிட்டிற் றின்று

விடுதலை’ யெனவேண் டாது

மட்டற்ற மகிழ்ச்சி யோடும்

மாலையில் வருவ தொத்தார்!


குழியினில் விழுந்த யானை

கொம்பனு யிருந்தும் கூடப்

பழியினைத் தீர்த்துக் கொள்ளப்

பயந்ததால் பாகன் பார்த்தே,

'எழு'வெனி னெழுந்து 'மிங்கே

இரு'வெனி னிருந்து மேவல்

வழுவுறு தடங்கிச் செய்தே

வசையுறல் போன்றும் வாழ்வார்!


காப்புற்ற தனது - வீட்டுக்

கதவினி லடுப்பி னின்றும்

தீப்பற்றி யெரியக் காணின்

திடுதிடென் றோடித் தண்ணீர்

மூப்புற்ற கிழவி யேனும்,

முகந்துவார்த் தவித்தல் விட்டுப்

பூப்பற்றிப் போட்டுத் தீயைப்

பூசிக்க மாட்டாள் கண்டீர்!


அறமெனும் அன்னை யீன்ற

அன்புச்சொல்; அறிவு சான்ற

திறமெனும் செவிலி காத்த

தெளிவுச்சொல்; தீமை தீர

மறமெனும் தோழி போற்றும்

மாண்புச்சொல்; மதிப்பு வாய்ந்த

புறமெனும் நூலில் பூப்போல்

புலன்கொளப் பொதிந்த பொன்சொல்!