பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

67

12 மல்லிகா மலர்ந்தாள்

நீலங்காத் திருக்கு மிந்த
நெடியவான் நிழலில், நீங்காக்
கோலங்காத் திருக்கும் கூத்துக்
குவலயம் கோலி யாக்கி,
மூலங்காத் திருந்தி யங்கும்
முதலிடை கடையில் லாஇக்
காலங்காத் திருத்தற் காமோ?
'கழிந்தபோ தொழிந்த’ தென்றே.

'கங்குலும் பகலு’ மென்னக்
கழிந்திடும் காலங் கண்ட
‘இங்கிதக் குயிலிஃ’ தென்ன,
‘எழிலன்ன மியங்கிற்’ றென்னப்
‘பைங்கிளி பயில்வ’ தென்னப்
‘பார்வதி ஈன்று பையத்
தங்கியே வளர்ந்தா’ ளென்னும்
தவமகள் மல்லி காதான்!

குன்றினி லுதித்துக் கோலக்
குவளையில் கண்ணு றங்கி,
ஒன்றுநந் நிலவி லூர்ந்தாங்
கொண்தளிர் மேல்த வழ்ந்து,
முன்றிலில் கமழப் பூத்த
முல்லைப்பா லார்ந்த தென்றல்,
மன்றினி லுலவக் கண்டு
மனமெலாம் மயங்கும் வேனில்!

நெல்லெலாம் வயலில் நின்ற
நிலைநீங்கி, நிறைந்தவ் வூரின்
இல்லெலாம் இருத்தற் கான
இடந்தர ஏற்ற தன்பின்,
சொல்லெலாம் சோர்வு தீர்த்துச்
சுகம்பற்றச் சுடரும் காதல்
புல்லலாம் புளகம் போர்க்கப்
பூத்தனள் மல்லி காவும்!