பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

96


சுகத்தினை மூடி வைத்துச்
சுவைத்திட வேண்டின், சோரும்
அகத்தினை மூடி வைத்தற்
கறிந்திட வேண்டும்; அன்றேல்,
சகத்தினை மூடி வைக்கும்
சாத்திய மற்ற தால், நாம்
முகத்தினை மூடி வைக்கும்
முறையுரு வாகித் தீரும்!

காதலும், கலப்பும் கட்டுக்
கதைகட்டிக் கதைப்போர்க் கன்றி,
வேதியர்க் குதவா! வீட்டை
விட்டினி வெளியே றாதே!
 “ நீதிக்காய் மாலா நீயும்
நெஞ்சிலே நிறுத்தி வைஇச்
சேதியை ” எனச்சே வித்துச்
செலவிட்டே னவளை” யென்றாள்.

 “ போருக்கு வரிந்து கட்டிப்
புறப்பட வேண்டாம் சீதா!
நீருக்குப் பதிலாய் நிற்க
நிழல்கேட்கும் செடியொன் றில்லை!
ஊருக்கு நீசெய் கின்ற
உபதேச முருப்ப டா!நான்,
நேருக்கு நேராய் நின்றென்
நினைவொன்ற வாழ்வே ” னென்றாள்.

கயல்போலும் கண்ணி நீலா
கனிவாய்நின் றுதிர்ந்த இச்சொல்,
அயில்போலும் கண்ணில் கோப
அனல்கக்க வைக்க அக்கா,
புயல்போலும் பாய்ந்து தங்கை
பூப்போலும் கன்னம் வீங்க,
 “ வெயில்போல எரிக்கும் சொல்லை
விளம்பாதே ” என்ற றைந்தாள்.