பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 தமிழர் நாட்டுப் பாடல்கள்

பெருநாழிப் பாதைக்கு பேசுங்கிளி போயிருக்கு கண்டா வரச் சொல்லுங்க கம்மந் தட்டை குச்சிலுக்கு காலு வளர்ந்த கிளி கல்லுரலு காத்தகிளி தோகை வளர்ந்த கிளி தோப்பிலயும் காணியளோ?

வட்டார வழக்கு:சிரிப்பாணி-சிரிப்பு (நெல்லை பேச்சு வழக்கு); பெருநாழி-முதுகுளத்தூர் தாலுகாவில் ஒரு ஊர்; காணியளோ-கண்டீர்களோ? (பேச்சு வழக்கு); ஊரு சுத்திக் காளை, உள்ளுருமட்டம்-இவை காதலனைக் குறிக்கும் குறியீட்டுச் சொற்கள்.

சேகரித்தவர்: S.S. போத்தையா இடம்: விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்.

    முறிவு

உழைக்கும் மக்களில் சில ஜாதிப் பிரிவினரில் விவாகரத்து சமூக வழக்கமாக நெடுநாளாக இருந்து வருகிறது.குடும்பத்தில் ஒற்றுமை குறைவதாலோ குழந்தை இல்லாததாலோ,ஆணோ பெண்ணோ, துர்நடத்தை யுடையவராயிருப்பதாலோ, சமூக வழக்கப்படி விவாகரத்துச் செய்து கொள்ளலாம். விவாகரத்து கோருபவர் ஊருக்குத் தீர்வை செலுத்த வேண்டும். விவாகரத்து செய்து கொண்டவர்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். சில வேளைகளில் பொய்க் காரணம் கூறி ஆண்கள் விவாகரத்து கோருவதும், பெண் சமூக ஆதிக்கத்துக்கு அஞ்சி சம்மதிப்பதும் உண்டு. விவாகரத்து செய்துகொள்ள சம்மதிக்காத ஒருத்தி, தனது கணவனின் கொடுமையை விவரித்து ஒரு பாடலைப் பாடுகிறாள்.

(பெண் பாடுவது)

காடைக் கண்ணி மாவிடிச்சு கருப்பட்டியும் சேர்த்திடிச்சு திண்ணு ருசி கண்ட பய தீருவையும் கேட்கிறானே