பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
468

தமிழர் நாட்டுப் பாடல்கள்

பழனிமலைப் பூசாரி-எனக்கு
பலனும் இல்லை என்பாரு
சொளவு அரிசி கொண்டு
சுருளிமலை போனாலும்
சுருளிமலைப் பூசாரி-எனக்கு
சுகமில்லை என்பாரு


விதவை வாழ வழியற்றவள் என்பது மட்டுமல்ல. அவள் ஓர் உயிருள்ள பிணம். மங்கல நாட்கள், திருவிழாக்கள், மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் பண்டிகைகள் இவற்றில் அவள் ஒதுங்கியிருக்க வேண்டும். அவள் எதிரே வந்தால் தீயநிமித்தம்; விதவை தாயாக இருந்தாலும், மங்கல நாட்களில் ஒதுங்கியே இருக்க வேண்டும். இதுவே அவளை உயிரோடு வாட்டி வதைப்பது. ஒரு குழந்தையிருந்தால் இவற்றையெல்லாம் மறக்க அது துணை செய்யும். குழந்தையும் அவளுக்கில்லை. அவள் துயரத்தை அளவிட முடியுமா? குழந்தைக்குச் சொத்தில் பங்குண்டு. அவன் உணர்வுக்கு இனியவன் மட்டுமல்ல, வாழ்க்கைக்கு வழி உண்டாக்குபவன். அவனை வைத்துக் கொண்டு தானும் வாழலாம். தனியே இருக்கும் விதவையை மைத்துனன்மார் விரட்டிவிட்டால் என்ன செய்வது? கோர்ட்டில் நியாயம் கிடைக்குமா? குழந்தை இருந்தால் நியாயமுண்டு. இல்லாவிட்டால் நியாயமில்லை. பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாதிருக்கும் நிலையில், பெண்களுக்கு நேரும் துயரநிலையை இவள் நம் கண்முன் கொண்டு வருகிறாள்.


மஞ்சணத் தொந்தியில
மைந்தன் பிறந்தாக்க
மைந்தனுக்குப் பங்குண்டும்
மதுரைக் கோட்டிலேயும் நியாயமுண்டும்
மஞ்சனத் தொந்தியில
மைந்தன் பிறக்கலியே
மைந்தனுக்குப் பங்குமில்ல மதுரைக்
கோட்டுலயும் ஞாயமில்லை
குங்குமத் தொந்தியில
குழந்தை பிறந்தாக்க
குழந்தைக்குப் பங்குமுண்டும்-மதுரைக்
கோட்டுலயும் நியாயமுண்டும்
குங்குமத் தொந்தியிலே
குழந்தை பிறக்கலயே