பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகரங்கள் கைத்தொழில் உற்பத்திக் கேந்திரங்களாக இருந்தன. நகரங்களின் உள்ளமைப்பையும், வாணிப வளத்தையும், வாழ்வோர் நிலையையும் சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. சேர, சோழ, பாண்டிய ராசதானி நகரங்களை அது வர்ணிக்கிறது. அப்பொழுது பெருங்குடி வணிகர்களுடைய செல்வாக்கு உச்ச நிலையிலிருந்தது என்பதையும், கட்டிக் காட்டுகிறது. இது தவிர அயல்நாடுகளோடு மரக்கலங்கள் மூலம் வாணிபத் தொடர்பிருந்தமைக்கும், அதன் மூலம் பெருங்குடி வணிகர்கள் பெரு நிதியம் திரட்டினார்கள் என்பதற்கும் சான்றுகளுள்ளன. இவர்களுடைய வளர்ச்சிக் காலத்திலேதான் கடற்கரையில் மீன் பிடித்தும், உப்புக் காய்ச்சியும் பிழைத்து வந்த பரதவரும், உமணரும், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்களைக் கற்றிருக்க வேண்டும். அயல் நாட்டு வாணிபத்துக்காக, புகார், கொற்கை, தொண்டி, முசிறி போன்ற துறைமுகங்கள் தோன்றின. அங்கே யவனர் கலங்கள் வந்து தங்கிச் சென்றன. துறைமுகச் சாவடிகளில் பொதிகள் அடுக்கப்பட்டுச் சுங்கம் வசூலித்ததற்கு அடையாளமாக மன்னனது முத்திரை பதிக்கப்பட்டன. இச்செய்தியைப் ‘பட்டினப் பாலை’ கூறுகிறது.

இவ்வாறு பெருங்குடி வணிகரின் செல்வாக்கு உயர்ந்தோங்கிய காலத்தில் அரசியல் வாழ்விலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சோழ நாட்டின் வளப்பம் காரணமாக அங்குதான் பெருங்குடி வணிகர் வர்க்கமும் வளர்ந்து வாணிபத்தைப் பெருக்கியது. வாணிபத்துக்குச் சந்தையாக தமிழ்நாடு முழுதும் இருக்க வேண்டும் என்பது அவர்களது நலனுக்கு உகந்ததாக இருந்தது. ஆகையால் அவர்கள் தமிழ்நாட்டின் முப்பெரும் பிரிவுகளிலும் தங்குதடையற்ற வியாபாரம் பெருக விரும்பினர். அதற்குத் தகுந்த சித்தாந்தத்தையும் உருவாக்கினர். மூன்று பிரிவுகளும், ஒன்றென்னும் எண்ணத்தை வளர்த்தனர். மூன்று மன்னர்களும் போராடாமல் வாழவேண்டுமென விரும்பினர். தமிழ் மன்னர் மூவரும் போராடாமல் வாழ்ந்தால் தங்கள் வாணிபம் பெருகுமல்லவா? ஆகவே சமாதானம் தமிழரின் பொதுவான கலை பண்பாட்டு ஒருமை இவற்றை அவர்கள் வலியுறுத்தினர். சேர வம்சத்தினராயினும், இளங்கோவடிகள் தன் கால சித்தாந்தத்தால்

8