பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் - 201 குடியிருப்புகளையும் (355 - 362) வரிசையாகக் கூறி, நாடு பல கடக்கவேண்டிய பெருவழி நலம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டிருப்பது, அதை உறுதி செய்வது காண்க. ஆகப் பழந்தமிழ்க் காலத்தே பெருவழிகள், தமிழகம் எங்கும் அமைந்திருந்தன என்பதும் அப்பெருவழிகள், இருமருங்கும் அழகிய சிற்றுரர்களையும், பேரூர்களையும் கொண்டிருந்தன என்பதும் தெளிவாயின; இப்பெருவழி நலத்தை அணிலாடு முன்றிலாரும், குடவாயில் கீரநக்கனாரும், கல்லாடனாரும், "அத்தம் நண்ணிய அங்குடிச் சிறுரர்” என்ற அழகிய தொடரால் (குறுந் : 41, 79 அகம் : 9) பாராட்டி யிருப்பது அறிக. இவ்வாறு செல்லும் வழி நெடுகிலும், சிறுசிறு குடியிருப்புக்களே எனினும், நனிமிகப் பலவாய் இருத்தலின், வழிச்செல்வார் அச்சம் கொள்ளாது, நிழல் கண்டவழி நெடும்பொழுது இருந்து இளைப்பாறியும் மணல் பரந்த இடங்காணும் தோறும் வண்டல் முதலாம் ஆடல் புரிந்து அகமகிழ்ந்தும் செல்லுமாறு அறிவுறுத்தவும் பட்டனர். - - - "நிழல் காண்தோறும் நெடியவைகி, மணல் காண்தோறும் வண்டல் தைஇ வருந்தாது ஏகு....நறுந்தன பொழில கானம்; குறும்பல் ஊர யாம் செல்லும் ஆறே" (நற் :9) எனப் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வழி காட்டுவது காண்க. பத்துப்பாட்டு எட்டுத்தொகையாகிய பழந்தமிழ்ப் பாடல்களில், நூற்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிற்றுார், பேரூர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள், அள்ளுர், வேலூர் என்பன போல், ஊர் என முடிவன இருபத்தைந்து மட்டுமே. அவை ஒழிந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊர்களில், ஆர்க்காடு என்பதுபோல், காடு என முடிவனசில: ஆலங்குடி என்பதுபோல், குடி என முடிவன சில இடையாறு என்பதுபோல், ஆறு என முடிவன சில. இவை போல்வன ஒருசில தவிர்த்து ஏனைய எல்லாம், அம்பர், உறந்தை, இருப்பை, குமரி, கூடல், கோழி, வஞ்சி, வேம்பி என்பன போலும், இடுகுறிப் பெயர்களாகவே அழைக்கப் பெற்றுள்ளன. இவ்வகையால் பெயர் பெற்ற ஊர்களில்,