பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் ... முதல் நுழைவு

331


"மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாதுஒளி நீ எனக்,
கன்னி ஏவலின் காந்த மன்னவன்....
............................................................
அமர முனிவன் அகத்தியன் தானது
துயர் நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்,
ககந்தன் காத்தல்

--மணிமேகலை : சிறைசெய்காதை : 25 - 27 மற்றும் : 35-36,

இதன்பொருள் : அரசர் குலத்தை அழித்த, மழு என்ற வாள் ஏந்திய நெடிய திருமாலாம் பரசுராமன் முன் தோன்றுவது தகாது, நீ மறைந்துகொள் எனக் கன்னித் தெய்வம் ஆணையிட, காந்த மன்னவன் தேவமுனிவனாம் அகத்தியன் கூறும், துயர் தீர்ந்துவிட்டது என்ற சொல் கேட்டு, நான் வரும் வரை ககந்தா! காப்பாயாக என்பதாம்.

கி. பி. முதலாம் ஆயிரத்தாண்டினைச் சேர்ந்த இந்தக் கதைகள் எதிலும், அகத்தியர், தெய்வ ஆசிரியனிடமிருந்த தமிழைப் பெற்றது அல்லது கற்றதைக் குறிப்பிடவில்லை. ஆகவே, பிற்காலத்தே வாழ்ந்த அகத்தியனார், முதல் தமிழிலக்கணத்தை எழுதிய உண்மை நிகழ்ச்சி, முதல் அகத்தியர், தமிழைச் சிவன் அல்லது சுப்பிரமணியரிடமிருந்து கற்றுத் தென்னிந்திய மக்களுக்குக் கற்றுத் தந்தார் என்ற புராணக் கதையாக மாறியது. உரையாசிரியர்கள் பெருகிப், பழங்காலம் குறித்த புராணக்கதைகளைக் கட்டிவிட்ட கி. பி. இரண்டாம் ஆயிரத்தாண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். பாயிரம் எனப்படும் தொல்காப்பிய முன்னுரையில் நச்சினார்க்கினியர் கூறுவதே, புராணக்கதைகளில் படுமோசமானது. அகத்தியனார், தம்முடைய மாணவர், திரணதூமாக் கினியாரைத் தம் மனைவி லோபா முத்திரையை, விதர்ப்பத்திலிருந்து பொதிய மலைக்கு அழைத்துவருமாறு பணித்தார். அதே சமயம் தம் மனைவியை நான்கு கோல் அளவிற்குக் குறைவாக அணுகக் கூடாது என்றும் எச்சரித்தார்.