பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 343

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், தங்களுக் குள்ளாக, ஒருவரோடொருவர் அடிக்கடி போர் செய்து கொண்டிருக்கும் அரசர்களின் அரவணைப்பில் வாழ்பவர்களுமாகிய புலவர்கள், மதுரை அரசன் ஆணையால் அழைக்கப்பட்டனர் என்பதை நம்புதல் நம்மால் இயலாது. புலவர்களின் ஒருசில வரிகளே உடைய சிறிய பாக்களைத் திறனாய்வு செய்து முடிவு வழங்க, ஓர் ஆண்டில் எத்தனை முறை அமர்ந்தனர் என்பது அறிவிக்கப்படவில்லை. முறையாக நிறுவப்படும் சங்கம் புதுமையானது. ஆகவே, அச்சங்கத்தைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர்க் கொண்டுபோவது, மிகப்பெரும் காலக் கணிப்பு வழுவாகும்.

 அகத்தியனார் காலத்துக்கு முன்பு எண்ணற்ற புலவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். காரணம் ; எண்ணற்ற பாக்களை முன்னதாகப் படித்து உணராமல் தமிழ் இலக்கியத்திற்கான இலக்கணத்தை அவர் எழுதியிருக்க முடியாது. ஆனால், இறையனார் அகப்பொருள் உரையாசிரியரால், அப்புலவர்கள் இருந்தது பற்றிய செய்தி கூடக் குறிப்பிடப்படவில்லை.
 முச்சங்கங்கள் குறித்த இச் செய்தியில் தெற்றெனத் தெரியக் கூடிய அறிவொடு பொருந்தாமை பலவற்றைக் குறிப்பிடலாம். மேலே கூறிய எட்டுத்தொகை நூல்கள் கடைச்சங்கத்தில் பணிபுரிந்த புலவர்களால் பாடப்பெற்றன என, அது கூறுகிறது. ஆனால் புறநானூறு என்ற தொகை நூலின் முதற்செய்யுள், இவ்வுரையால் முதற்சங்கப் புலவராகக் கூறப்பட்ட முடிநாகராயரால் பாடப்பட்டுள்ளது. அது போலவே இறையனார் அகப்பொருள் உரையாசிரியரால், இடைச் சங்கத்துக்கு உரியராகக் கூறப்பட்ட புலவர்களால் பாடப்பெற்ற பல பாக்கள், இத்தொகை நூல்களில் 

காணப்படுகின்றன. நற்றிணை 105, 228 ஆம் செய்யுள்கள் இரண்டும், இரண்டாம் சங்கத்தின் கடைசிப் புரவலனாகிய முடத்திருமாறனால் பாடப்பட்டனவாம். [இந்தக் காவல பாவலன், பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆண்டிருப்பது போலவே (சாபம்-