பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்.

நாட்களின் பெருக்கம்: திங்கள்திங்களின் பெருக்கம் யாண்டு : யாண்டுகனின் பெருக்கம் ஊழி என உணர்ந்து, அவ்வாறே பெயரிட்டும் வைத்தனர். நின் நாள், திங்கள் அனையவாக, திங்கள் யாண்டோ ரனைய வாக யாண்டே ஊழி அனையவாக' (பதிற்றுப்பத்து : 90) குடக்கோ இளஞ்சேரல் இரும் பொறையைப், பெருங்குன்றுார் கிழார் வாழ்த்திப் பாடிய பாடலைக் காண்க.

நாழிகை, நாள், திங்கள், யாண்டு இவற்றை அறிந்திருந்த தோடு, ஒருவன் வாழ்நாளில் கழிந்த நாழிகை எத்தனை, கழிந்த நாட்கள் எத்தனை , கழிந்த ஆண்டுகள் எத்தனை என்பதைக் கணக்கிட்டுக் குறித்துவைக்கவும் தெரிந்திருந் தனர்.

கனகவிசயரை வென்று, கண்ணகி சிலைக்காம் கல்கொண்டு கங்கைப் பேராற்றங்கரையில் பாடி கொண்டிருந்த போது, வஞ்சி நீங்கி வந்து 32 திங்கள் கழிந்து விட்டதைச் செங்குட்டுவனுக்குக், காலம் அறிந்து கூறும் கணி நினைவூட்டியதும், எண்ணான்கு "மதியம் வஞ்சி நீங்கியது" (சிலம் : நீர்ப்படை : 149) வட பேரரசுகளை வென்று கண்ணகிக்குச் சிலை கொணர்ந்த தன் கொற்றத்தில் குறை கண்டனர், சோழனும், பாண்டியனும் எனக் கேட்டுச் சினந்து, அவர் மீது சமர் தொடுக்க எழுந்த போது, 'ஆட்சிக்காலம் 50 ஆண்டைக் கழிந்த பின்னரும் அறச் செயல் மீது ஆர்வம் கொள்ளாது. மறச் செயல் மீதே மனங்கொள்வது மாண்புடைய தாமோ ?' என்ற மாட வன் அறிவுரையில், செங்குட்டுவன் ஆட்சிக்கால ஆண்டு, 'வையம் காவல் பூண்ட நின் நல்யாண்டு, ஐயைந்து இரட்டி சென்றது' (சிலம்பு : நடுகல் : 129 -130) என நினைவூட்டியிருப்பதும் காண்க.

வாழ்நாளில் கடந்த காலத்தைக் கணக்கிட்டுத் தெரிந்து கொள்ளும் அவர்கள், இனி வாழ வேண்டிய நாட்களை வகைப்படுத்திக் கொள்ளவும் மறந்திலர். "சென்ற காலமும்"வரூஉம் அமையமும்’ என்ற மதுரைக் காஞ்சி (417) அடியினைக் காண்க.