பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

482

தமிழர் வரலாறு

யவனர், நல்ல குப்பிகளில் கொண்டுவந்த குளிர்ந்த, இனிய மணம் உடைய மதுவை, ஒள்ளிய வளை அணிந்த மகளிர், பொன்னால் செய்த அழகிய கலங்களில் ஏந்தி வந்து நாள்தோறும் ஊட்டிய நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.

“யவனர், நன்கலம் தந்த தண் கமழ் தேறல்,
பொன் செய் புனைகலத்து ஏந்தி, நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப” புறநாநூறு : 56 , 18-20

இன்னொரு பாட்டு, பொன் நாணயங்கள் இறக்குமதியைக் குறிப்பிடுகிறது. அது, “சேர அரசர்க்குரிய, சுள்ளி ஆகிய, அழகிய பேரியாற்றின் வெண்ணுரைகள் சிதறி அகலுமாறு, யவனர்கள் கொண்டுவந்த, தொழிலால் மாட்சிமைப்பட்ட நல்ல கப்பல்கள், பொற்காசுகளோடு வந்து, மிளகுப்பொதிகளோடு மீண்டு செல்லும், வாணிகவளம் மிக்க முசிறித்துறை ஆரவாரத்தை”க் குறிப்பிடுகிறது;

“சேரலர்,
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பு” அகநானூறு 149 : 7.11

ஒரு புறநானூற்றுப்பாட்டு, “மனையில் குவித்துகிடக்கும் மிளகுப் பொதிகளால், ஆரவாரம் மிக்க கடற்கரை கலக்கம் உறும் ; கப்பல்கள் கொண்டுவந்த பொற்காசுகள், உப்பங்கழிகளில் உள்ள தோணிகளால் கரைசேரும், முழவொலிபோல் கடல் முழங்கும் முசிறி” என, இவ்வாணிக வளத்தை, யவனர் பெயர் குறிக்காமல், குறிப்பிடுகிறது:

“மனைக்குவை இய கறி மூடையால்
கலிச் சுமைய கரை கலக்குறுந்து
கலம் தந்த பொற்பரிசம்
கழித் தோணியால் கரைசேர்க்குத்து;”