பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி; பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

437


உள்ளாகவே அடங்கிவிடுகிறது என்ற காரணமோ, 2) இயற்கையொடு பொருந்தா நிகழ்ச்சிகள், புகார் மதுரைக் காண்டங்களிலும், வஞ்சிக் காண்டத்தில் அதிகம் என்ற காரணமோ, 3) கோவலனும் கண்ணகியும் சென்ற, புகார்க்கும் மதுரைக்கு மிடையிலான நாடுகளின் இயற்கை நலம் விளங்க உரைக்கப் பட்டது போல், செங்குட்டுவன் படையெடுத்துச் சென்ற, நீலகிரிக்கும் கங்கைக் கரைக்கும் இடையிலான நாடுகளின் இயற்கை நலம் உரைக்கப் படவில்லை என்ற காரணமோ, 4) போன பிறவி பற்றிய கட்டுக்கதைகள், வஞ்சிக் காண்டத்தில் அதிகம் என்ற காரணமோ ஏற்புடையன ஆகா, என்பது, மேலே கூறுயவாறு விளக்கப்படவே, வஞ்சிக்காண்டம், சிலப்பதிகாரம் என அழைக்கப்படுதற்கு உரிமை இல்லாத, இளங்கோ வடிகளால் பாடப்பெறாத தனி நூல் என்ற அவர் கூற்று ஏற்கக் கூடியது அன்று என்பது உறுதி செய்யப்பட்டது:அது உறுதி செய்யப் படவே, புகார், மதுரைக் காண்டங்களோடு வஞ்சிக் காண்டமும் சேர்ந்ததே சிலப்பதிகாரம் என்ற முழு நூலாம், அம் மூன்று காண்டங்களையும், இளங்கோவடிகள் ஒருவரே தாம் பாடியுள்ளார் என்பது முடிந்த முடிபாகிறது.

செங்குட்டுவன் வெற்றிப் புகழ்பாடும் வீரகாவியமே வஞ்சிக்காண்டம்; சிலம்பின் கதை கூறுவது அதன் குறிக்கோள் அன்று என்ற திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்காரின் கூற்று உண்மையோடு பட்டதாயின், அது, கண்ணகி சிலைக்காம் கல்கொணர வடநாடு சென்று பெற்ற வெற்றியை விளங்கக் கூறுவதோடு நின்றிருக்காது; அவன் வீர வரலாறுகள் அனைத்தையும் ஒன்றுவிடாது கூறியிருக்கும்;

செங்குட்டுவன் ஆண்மைக்குச் சான்று பகர்வது, கல் கொணர்ந்த இச்செயல் ஒன்று மட்டுமன்று; எண்ணற்றன வேறு பலவும் உள.

மறைந்த தன் தாய் நச்சோணையின் படிமத்தை கங்கையில் நீராட்டச் சென்றபோது, ஒன்று திரண்டு வந்து,