பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தமிழர் வாழ்வு


(பெரிய அளவில்) பல பொருள்களைக் கொண்டு காட்டியிருக்கிறார்கள். சிலர் உயிர் வளர்ச்சியில் ஓரளவு வளர்ந்த பிறகு ‘கல்’ (Fossil ) என்று குறிக்கிறார்கள். அதற்குப் பிறகு உயிர் வளர்ச்சியின் நிலையே மாறுபடுகிறது.

‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி, முனிவராய்த் தேவராய்ச்
செல்லா கின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்’

என்று மணிவாசகர் கூறியது அங்கு நிரூபிக்கப்பெறுகிறது.

நம்முடைய சென்னைப் பல்கலைக் கழக 125ஆவது ஆண்டு விழாவின் போது, தியாகராயர் கல்லூரியில் இருந்தேன் அப்போது உயிர் வளர்ச்சி பற்றித் திருவாசகத்தின் அடிப்படையில் ஒரு காட்சி வைத்திருந்தேன். திரு டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் அவர்கள் அங்குப் பார்க்க வந்திருந்தார். அப்போது ‘நடுவில் வரும் கல் என்பதற்கு என்ன பொருள்?’ எதுவும் புரியவில்லை என்று கேட்டேன். அவர், ‘This is the Fossil stage, you are perfectly right. Manickkavasakar also is right’ என்று கூறினார். இது ‘பாசில் என்னும் கல் நிலையைக் குறிப்பது; இது முற்றிலும் சரியே’ என்றார்.

நியூயார்க்கில் உங்கள் மாணிக்கவாசகர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்ல விரும்புகிறேன். அது மட்டுமன்று, இலக்கியத்திலே ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி’ என்றெல்லாம் படிக்கின்றீர்கள். நில ஆராய்ச்சியைப் பற்றிய அதே பகுதியிலே, முதலில் தோன்றியது கல், பின்னால் தோன்றியது மண் என்று சான்றுகளுடன் விளக்கியிருக்கின்றனர். வரலாறு காணாத காலத்துக்கு முன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/102&oldid=1358366" இலிருந்து மீள்விக்கப்பட்டது