பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் தமிழர்

107



பிட்ஸ்பர்க்கில் வேங்கடவன் கோயில் உள்ளது. நம் திருப்பதியாகிய வேங்கடத்தைப் போன்றே உள்ளது. தமிழர் அண்மையில் கட்டியது. பல அமெரிக்கர் வந்து வழிபடுகின்றனர். நாலாயிரப் பிரபந்தப் பாடல்கள் – சிறப்பாக ஆண்டாள் திருப்பாவை நாள்தோறும் அங்கே பாடப்பெறுகின்றன. அமெரிக்க நாட்டில் எல்லா ஊர் களிலும் நம்நாட்டுக் கோயில்களும் வழிபாடுகளும் உள்ளன.

பின் ஜப்பான் ஹாங்காங், மலேயா, சிங்கப்பூர் ஆகிய இடங்களையும் கண்டு வந்தேன். ஜப்பான் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழி பாடமாக இல்லையாயினும், அங்குள்ள வரலாற்றுப் பேராசிரியர் காரசிம்மா அவர்கள் வரலாற்றை நன்கு அறிந்தவர். சோழர் காலத்திய கல்வெட்டுகளை மூன்று பகுப்பாக அச்சிட்ட வல்லவர். தமிழகம் வந்து தமிழ்நாட்டு நாகரிகம், பண்பாடு ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்பவர். அப் பல்கலைக்கழகத்தே தொல்பொருள் ஆய்வுத் துறையில் தமிழகத் தொல்பொருள் ஆய்வினையும் காண்கின்றனர். ஜப்பான் நாட்டு மக்களின் பழைய வீடுகள் நம் தமிழக வீடுகளைப் போன்றே உள்ளன. வருபவரை வரவேற்க வெளியே திண்ணை போன்ற அமைப்பு, விருந்துடனாயினும் தனியாகிலும் உண்ண பாய் அல்லது தடுக்கு இட்டு, கீழே உட்கார்ந்து உண்ணும் நிலை, பிற முறைகள் அனைத்தும் நம் தமிழ் நாட்டை நினைவூட்டுகின்றன. தமிழகத் தென்பகுதியில் எப்போதோ ஒருமுறை முத்துக் குளிக்கும் நிலை; இங்கே அன்றாட நிலையாக உள்ளது. ஜப்பானிய நாட்டின் உயர்கல்வி அதிகாரி (Joint director for Education) ஜப்பான் மொழி மட்டும் தெரிந்தவர். பிறமொழிஆங்கிலம் உட்பட ஒன்றும் தெரியாது. தமிழ்நாட்டில் தமிழ் மட்டும் அறிந்தவரை அந்த நிலையில் எந்த அரசாங்கமாவது இதுவரை நியமித்துள்ளதா? இனியாவது நியமிக்குமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/109&oldid=1358407" இலிருந்து மீள்விக்கப்பட்டது