பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தமிழர் வாழ்வு


துய்க்கும் பொருள் எனப் பலவகையில் பொருள் சொல்லாம். எல்லாப் பொருள்களுக்கும் ஏற்ற வகையில் சங்கப் பாடல்கள் உள்ளன.

கோவூர் கிழார் கிள்ளிவளவனைப் பாடுங்கால் அவன் நகர் ‘கொளக் கொளக் குறையாக் கூழுடை வியன் நகர்’ (புறம் 70) எனப் பாராட்டுகின்றார். மேலும் உணவினை ‘இருமருந்து’ எனவே பாராட்டுகிறார்.

“அடுதீ யல்லது சுடுதீ யறியாது
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்”

(புறம் 70)

என்று நல்லுணவாகிய ‘கூழ்’ நிலை காட்டுவதோடு, சுடுதீ அறியாச் செங்கோன்மையினையும் அவன் தன்மையினையும் உடன் காட்டிவிட்டார்.

அமைச்சர் பலர் அருகிருந்தே அரசியல் காரியங்கள் நடை பெற்றுவந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்குச் சான்றுகாட்டி விளக்குகின்றன. தன் கோயிலையும் பெருஞ்செல்வத்தையும் வழங்கிய பெருஞ்சேரல் இரும்பொறைக்கு அரிசில் சிழார் என்னும் வேளாண் புலவர் அமைச்சுப் பூண்டார் என்பதைப் பதிற்றுப்பத்து (8-ஆம் பத்துப் பதிகம்) நன்கு காட்டுகின்றது. அடுத்துவரும் ஒன்பதாம் பத்தின் பதிகத்தால் ‘மெய்யூர்’ அமைச்சியலில் மையூர் கிழான்’ என்பார் அமைச்சராக இருந்தார் என்பதும் புலனாகின்றது. அரிசில் கிழார், மையூர் கிழார் போன்ற அறிவறிந்த நல்ல பெரியோர் அரசர்களுக்கு அமைச்சர்களாக இருந்து நாட்டை நல்வழியில் செலுத்திச் சென்றனர் எனக் காண்கிறோம். ‘அமைச்சர்’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் அதிகம் பயின்று வரவில்லையாயினும் ‘சூழ்வாராக’ அவர் அமைந்தார். இதனால் அமைச்சரின் தூய்மையும் வாய்மையும் புலப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/120&oldid=1358642" இலிருந்து மீள்விக்கப்பட்டது