பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரசியல் - வள்ளுவரும் சங்க காலமும்

119



நட்புப் பற்றியும் அந் நட்பின் வளத்தால் புலவர் புரவலர்களை எவ்வெவ்வாறு போற்றிப் பாட்டிசைத்தனர் என்பதையும் காண்கின்றோம். நட்பினைப் பற்றிப் பல அதிகாரங்கள் வள்ளுவர் கூறுவர். அத்தனைக்கும் விளக்கங்கள் சங்க இலக்கியங்களுள் காணலாம். ஒத்தார் மாட்டு மட்டுமன்றி, சாதாரண மக்களிடத்தும் அன்பொடு கலந்த நட்பின் நிலையில் மன்னர் வாழ்ந்தார் என்பதைப் பல புலவர்கள் காட்டுவர். ‘கேண்மை’ என்ற சொல்லும் இதற்குப் பயன்படுத்தப் பெறுகின்றது.

“பெரிது ஆண்ட பெருங் கேண்மை
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்”

(பொருநர் 229-30)

என்று கரிகாற் பெருவளத்தான் பண்பு பாராட்டப் பெறுகின்றது. அகப் பொருள் இலக்கியங்களுள் இக்கேண்மையாகிய நட்புப் பேசப்பெறுகின்றது. பெரியவர் நட்பினை,

“தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீங்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை”

(நற். 1)

என்று நல் உவமை வழியே பெரியோர் நட்பு காட்டப் பெறுகின்றது. மேலும் பல அகப்பாடல்களில் தலைவர் கேண்மை பேசப் பெறுகின்றது. வீட்டுத் தலைவர் கேண்மையில் நாட்டுத் தலைவர் கேண்மையை. நாம் உணரலாம் என்ற அளவில் நின்று மேலே செல்லலாம்.

நல்லவர் நட்புப் பிரிக்கலாகாத ஒன்று என்பதைக் கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் இடையே இருந்த நட்பின் வளத்தால் (புறம் 215, 126) நன்கு உணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/121&oldid=1358646" இலிருந்து மீள்விக்கப்பட்டது