பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் - வள்ளுவரும் சங்க காலமும்

125


தாம் மட்டுமன்றித் தம் குடிமக்களும் சிற்றினஞ்சாரா வகையில் அரசுமுறை அறிந்து போற்றிய மன்னரும் அம் மன்னர்வழி ஒழுகிய குடிகளும் நம்முன் கா ட் சி தருகின்றனரே! அத்தகைய சான்றோராம் அறிஞர் முன் நின்று தடுத்த போர்களும் குடிப் பூசல்களும் பல உள்ளனவே?

"இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்"

(குறள்-447)

என்ற குறள் அடிக்குத் 'தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடைமை' எனப் பரிமேலழகர் விளக்கம் தருகிறார். இந்த உரை வகையில் அல்லன செய்யுங்கால் இடித்துரைத்துத் திருந்திய புலவர்களையும் திருந்திய புரவலர்களையும் காண்கின்றோம். கண்ணகியைத் துறந்த பேகனைப் பரணர் இடித்துத் திருத்த, அவன் திருந்தியதோடு, யாரும் கெடுக்கா வகையில் நெ டி து வாழ்ந்தான் என அறிகின்றோம். அப்படியே சோழன் குளமுற்றத்துத் து ஞ் சி ய கிள்ளி வளவனைக் கோவூர் கிழார் இடித்துரைத்து (புறம் 46) மலையமான் மக்களை விடுவித்ததும், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அந்துவன் சேரனிடம் "நோயிலனாகப் பெயர்கதில் அம்ம" என்று கூறிப் பெருநற்கிள்ளியை அனுப்பியதும் நாடறிந்த வரலாறுகள் அல்லவா? இவ்வாறு பாட்டிலும் தொகையிலும் பலப்பல இடங்களில் தவறும் மன்னர்களும் வீரர்களும் பெரியார் துணைக்கோடலால் திருந்தி, புகழுற்று இன்றளவும் வாழ்கின்றார்கள் என அறிகிறோம்.

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்"

(குறள்-69)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/127&oldid=1358420" இலிருந்து மீள்விக்கப்பட்டது