பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தமிழர் வாழ்வு



தேவனும்" என்ற உணர்வினையும், அடுத்துச் சைவம் வைணவம் என்ற இரு சமயங்கள் ஒன்றினை ஒன்று தாக்கா வகையில் இணைந்தும் சென்றமையைத்தான் சங்க காலத்தில் காண முடிகின்றது. ஆனால் செங்குட்டுவன் காலத்தை ஒட்டியும், அவனுக்கு அடுத்த சில ஆண்டுகளிலும் எழுந்த இலக்கியங்களில் சமயப் பூசல்கள் இடம் பெற்றமையைக் காண்கிறோம். அப்படியே பல்வேறு வகைப்பட்ட அரச மரபினர் தத்தம் முயற்சிக்கும் திறனுக்கும் தக்க வகையில் புகுந்தும் பிரிந்தும் நுழைந்தும் மாறியும்—ஏன்—நாட்டு மக்களை மாற்றியும் தத்தம் வாழ்வு, சமய நெறி முதலியவற்றை நிலைபெறச் செய்ய முயன்றனர். அக்கால நிகழ்ச்சிகளைக் அரச ஆதிக்கத்துக்காக ஏற்பட்ட போராட்டங்கள் என்பதைக் காட்டிலும் கொள்கை, சமயம், ஒரளவு மொழி இவற்றின் அடிப்படையில் அமைந்த போராட்டங்கள் எனக்கொள்வது பொருத்தமாகும். இத்தகைய மாறுபாடுகளுக்கு இடையில் நாடு தன்னிலை கெட்ட காலத்தில் வந்தவருள் ஒரு மரபினரே பல்லவர் ஆவர். அவர் வருகை நாட்டில் உண்டாக்கிய மாறுதலைக் காட்டுவதே இன்றைய கூட்டத்தின் கருத்தாகும்.

தமிழ்நாட்டு வரலாற்று எல்லைக்கு முற்பட்ட காலந்தொட்டு ஆண்டுவந்த பழங்குடி மக்களாகிய மூவேந்தர்களும் அவரொடு வாழ்ந்த குறுநில மன்னர்களும் வள்ளல்களும் தத்தம் நிலைகுலைந்த காலத்திலேதான், தமிழ் நாட்டு மரபுக்கு முற்றும் மாறுபட்ட பல சமுதாய மக்களும் சமய மக்களும் அவர்தம் தலைவர்களும் அலையலையாகத் தமிழ்நாட்டில் புகுந்தனர். அதற்கு முன்பும்கூடப் பல வடநாட்டுப் பெரு மன்னர்கள் — அசோகன் உட்பட—தெற்கு நோக்கி வந்திருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டு எல்லையுள் ஆட்சிக்காகவோ, கொள்கை அல்லது சமயம் பரப்பியோ உரிமை கொண்டாடி நுழைய முடியவில்லை.{{Nop}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/136&oldid=1358570" இலிருந்து மீள்விக்கப்பட்டது