பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

137


எப்படிக் காட்டமுடியும்? நாக நாடு என்பது தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடைபட்ட மணிபல்லவத் தீவினுக்கு அண்மையில் இருந்த தீவுகளில் சில. இதனை மணிமேகலை நன்கு விளக்கும். மணிபல்லவத்தில் இருந்த பீடிகை சம்பந்தமாக இரு நாட்டு மன்னர் போரிட்ட நிலையினை,

"கீழ்நில மருங்கில் நாகநா டாளும்

இருவர் மன்னர் ஒருவழித் தோன்றி"
(மணி. 8. காதை)

அப் புத்த பீடிகைக்கு உரிமை கொண்டாடினர் எனக் காட்டுகிறது. எனவே இன்றைய யாழ்ப்பாணத்தை ஒட்டிய தீவுகளில் சிலவே நாகநாடு என்பது தேற்றம். ஏனெனில் ம ணி ப ல் ல வ ம் அன்றைய கா வி ரி ப் பூம்பட்டினத்துக்கு முப்பது யோசனைத் துரத்தில் தெற்கே இருந்த தீவு என்பதனை மணி மேகலை,

"அந்தம் ஆறா ஆறைந்து யோசனை
தென்திசை மருங்கில் சென்றுதிசை உடுத்த
மணிபல்லவத் திடை மணிமேகலா தெய்வம்

அணியிழை தன்னை வைத்த கன்றது"
(காதை-6. கடைசி வரிகள்)

எனக் காட்டுகின்றது. எனவே இதன் வழியே பல்லவர் தாய் வழியாக மாறுபட்டவர் என்பதனையும் பிராகிருதம் அறிந்தவர் என்பதனையும் காட்ட இயலாது. அந் நாகநாடும் தமிழ் மரபோடு கூடிய மக்களையும் மன்னரையும் கொண்ட நாடாக இருந்தது தேற்றம். இன்றும் அந் நாக நாட்டினை நினைவூட்டிக் கொண்டு மணிபல்லவத் தீவில் நாகதேவதை நாகம்மையாகப் பெருங்கோயில் கொண்டு, தமிழ் மரபுக்கு ஏற்பச் சிறப்பொடு பூசனைகளை ஏற்று இருந்து வருவதைச் சென்றோர் அறிவர். புத்த பீடிகையும், புத்தர் பள்ளமாகிய கோமுகிப் பொய்கையும் அத்தீவில் ஒரு பக்கம் இலங்கைவாழ் புத்த சமயத்தினருக்குப் புனித

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/139&oldid=1358830" இலிருந்து மீள்விக்கப்பட்டது