பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தமிழர் வாழ்வு


பட்டிருக்கலாம் என்பது, பழைய இலக்கியங்களை—சிறப்பாக முல்லைநிலப் பாடல்களைக் காண்போர்க்கு விளங்கும். 'மஞ்சு'வாகிய மேகம் வரக் கண்டு உளங்களித்துத் தோகை விரிக்கும் மயிலை அதனால்தான் 'மஞ்ஞை' என அழைத்தார்கள் போலும். 'மஞ்சு விரட்டு' என்பதே 'மஞ்சி விரட்டு' என்றாகியது.

இந்த மஞ்சு விரட்டு தமிழகத்தில் மிகப் பழங்காலந் தொட்டே இருந்துவரும் ஒன்றாகும். சங்க கால இலக்கியங்களும் தொல்காப்பியம் போன்ற பழைய இலக்கணங்களும் பிற்கால இலக்கிய இலக்கணங்களும், 'கொல் ஏறு தழுவல்' என்று இதைப் போற்றிவந்தன. இன்று இதை எல்லாப் ப கு தி ம க் க ளு ம் கொண்டாடுகிறார்கள் என்றாலும் அந்தப் பழைய காலத்திலே, காடாகிய முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் பெருமக்களே இவ் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடினர் என்று அறிய முடிகிறது. ஆயினும் வெறும் பொழுதுபோக்குக்காகவோ—போர் விளைத்து வினையாற்றி வீழ்வதற்காகவோ இது நடை பெறவில்லை. முல்லை நிலத்து ஆய்ர்குலப் பெண்களுக்கு நல்ல—வீரமிக்க கணவரைத் தேர்ந்தெடுக்கவே இந்தக் 'கொல்லேறு தழுவல்' நடைபெற்றது எனக் காண்கிறோம். சங்க இலக்கியங்களில் — சிறப்பாகக் கலித்தொகையில்—முல்லைக் கலியில் இதன் தெளிந்த காட்சிகளையும் பயன்களையும் வாழ்வின் செம்மையினையும் காண முடியும்.

தமிழர் வாழ்வு காதலும் வீரமும் கலந்த ஒன்று. அகமும் புறமும் ஒன்றிய வாழ்வே அவர்தம் வாழ்வு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்திலே இந்த வாழ்வு சுட்டிக் காட்டப்பெறுகின்றது. நிலத்தினை ஐந்து வகையாகப் பிரித்து, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்து, அந்தந்த நிலத்தின் இயற்கைக்கு ஏற்ப அங்குள்ள மக்கள் வாழ்ந்துவந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/14&oldid=1358288" இலிருந்து மீள்விக்கப்பட்டது