பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர் கால வரலாறு

139


இந்தியர் என்று கூறமுடியுமா? கொடி வழியாக வந்தவராயின் அதன் தமிழ்ப் பெயரை விடுத்து, வேற்று மொழிப் பெயராகிய பல்லவர் என்று அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வார் என்று நினைப்பது எவ்வளவு பொருத்தமற்ற ஒன்று. எனவே, இவற்றால் அவர்களைத் தமிழகத்தைச் சார்ந்தவர் என்று கொள்ளல் கூடாது. மேலும் அவர்கள் தமிழ் மரபினராகவே – இளந்திரையன் வழியினராகவே இருந்திருப்பாராயின் தமிழ்நாடு அவர் தம் ஆட்சியில் நிலை கெட்டு, மொழி கெட்டு, மரபு கெட்டு, சமயம் மாறி, பிற வகையில் எல்லாம் இருட்டடிப்புச் செய்யும் வகையில் இருந்திருக்குமா என எண்ணிப் பார்க்கவேண்டும். மேலும் முதற் பல்லவர் தம் வாழ்வும் பிற தொடர்புகளும் பெயரும் பிறவும் வடநாட்டவரோடு தொடர்புடையனவாகவே அமைவதையும் மறக்க முடியாது. அவர்கள் வட இந்தியாவையோ தக்கணத்தையோ சார்ந்தவரா அல்லது ஒரு சிலர் நினைக்கும்படி ‘பார்த்திய நாடு’ என்ற ஒரு வெளிநாட்டில் இருந்து வந்தவரா என்பதில் ஐயமிருக்கலாம். அது பற்றிய கவலை நமக்கு இங்கே தேவையில்லை. அவர்கள் முற்றும் தமிழ் இனத்துக்கு வேறுபட்டவராகித் தமிழ்நாட்டின் வடக்கே இருந்து வந்தவரே எனக் கொள்வது பொருத்தமானதாகும்.

அவர்கள் வடக்கிருந்து வந்தவர்கள் என்பதற்கு அவர் தம் குகைக் கோயில்களும் சான்று பகரும் என்பர் சிலர். மராட்டிய நாட்டிலுள்ள அஜந்தா, எல்லோரா போன்றவற்றையும் பிற்காலப் பல்லவர் தம் குகைக்கோயில்களையும் ஒப்பு நோக்கின், வளர்ந்த அந்த மாரட்டிய நாட்டின் கலையுணர்வு பெற்ற பரம்பரையினருள் ஒரு சாரார் தெற்கு நோக்கி வந்தார்களோ எனக் கொள்ள இடமுண்டு. எனினும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் அத்தகைய குகைக்கோயில்கள் இல்லாமையாலும் வடக்குள்ளவையும் காலத்தால் பிற்பட்டவை எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/141&oldid=1358865" இலிருந்து மீள்விக்கப்பட்டது