பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர் கால வரலாறு

141


மேலே கண்டோம். அதே காலத்தில்தான் அண்டை நாடாகிய ஆந்திரத்தில் சாதவாகனப் பேரரசு வலிவுற்றதாக ஆக்கப்பெற்றிருந்தது. அவருடன் ஒட்டியோ அடங்கியோ, வேறு வகையாலோ வடகிழக்கிலும் தென் மேற்கிலும், மேற்கிலும் பலப்பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். ஏறக்குறைய அதே காலத்தில்தான் களப்பிரர் என்பார் தமிழ்நாட்டின் மேல் படையெடுத்து வந்து வடபகுதியை வெற்றி கொண்டு ஆண்டனர் என்றும், சாதவாகனரோ அவர்தம் ஆணைவழிச் சிற்றரசரோ அவர்களை வடக்கே நெருக்க, அவர்கள் மேலும் தெற்கே சென்று பாண்டிய நாட்டைக் கைக்கொண்டு நாட்டு நிலையை மாற்றினர் என்றும் அறிகிறோம். அவ்வாறு அவர்கள் தெற்குநோக்கிச் செல்லக் காரணமானவர்களைப் பல்லவர் எனக்கொள்ளல் பொருத்தமாகும். திரு. கிருஷ்ண சாமி ஐயங்கார் அவர்கள் அப் பல்லவரை வடமொழிப் பல்லவர் எனக் குறிப்பர். (Pallavar of Kanchi - Gopalam P. XXII) பிராகிருதப் பல்லவர் எனக் கொள்ளலும் தவறில்லை. வளர்ந்திருந்த சாதவாகனப் பேரரசின்கீழ் இருந்த வாரங்கல் காகேத்தியரும் மேலை நாட்டுக் கங்கரும் ஆந்திர எல்லையில் இருந்த பல்லவரும் தத்தம் ஆணையை வலுப்படுத்திக் கொள்ளப் பல வகையில் முயன்று ஓரளவு வெற்றி பெறவேதான் சாதவாகனப் பேரரசும் தளர்ச்சியுறலாயிற்று. அடங்கிய சிறுசிறு தொகுதியினராகி அவர் வழி ஆங்காங்கே சிற்றரசர்களாகவும் எல்லைக் காவலர்களாகவும் இருந்த அரச பரம்பாையினரும் அவரைச் சார்ந்தவரும் மெல்லத் தலை தூக்கித் தனி ஆட்சி அமைக்கத்தொடங்கினர். அந்த வழியிலேதான் நெல்லூர் குண்டுர் ஆகியவற்றை ஒட்டியோ அவற்றின் மேல் பகுதியை ஒட்டியோ வாழ்ந்த இந்த மரபினர் தம் எல்லையை விரிவாக்கிக்கொண்டு தாழ்ந்திருந்த தெற்குப் பகுதியை நோக்கி, காடு அடர்ந்த தொண்டை மண்டலப் பகுதியைக் கைப்பற்றி, வேங்கடத்தில் வாழ்ந்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/143&oldid=1359026" இலிருந்து மீள்விக்கப்பட்டது